வவுனியா நகர சபை மண்டப மைதானத்தில் இடம்பெற்ற சுதந்திர தினக் கொண்டாட்ட நிகழ்வின்போது, மாணவிகள் உட்பட 18 பேர் மயக்கமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சுதந்திர தின அணிவகுப்பில் ஈடுபட்ட பாடசாலை மாணவர்கள், சிவில் பாதுகாப்பு படையினர், காவவ்துறையினர், இராணுவத்தினர் ஆகியோர் பிரதான நிகழ்வு இடம்பெற்ற மேடைக்கு முன்னால், மைதானத்தில் அணிவகுப்பு மரியாதை முடிந்த பின்னர் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தனர்.
சுமார் ஒரு மணித்தியாலத்திற்கு மேலாக அவர்கள் மைதானத்தில் நிறுத்தி வைக்கப்பட்டமையால், வெயில் தாக்கம் காரணமாக, 13 மாணவர்களும், 5 சிவில் பாதுகாப்பு படையினருமாக 18 பேர் மயக்கமடைந்ததாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
இதையடுத்து, அவர்களுக்கு உடனடியாக முதலுதவி வழங்கப்பட்டுள்ளது.
அத்துடன், அணிவகுப்பில் ஈடுபட்ட பாடசாலை மாணவர்கள், சிவில் பாதுகாப்பு படையினர், காவவ்துறையினர், இராணுவத்தினர் என அனைவரும் அங்கிருந்து செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளனர்.








































