தயாரிப்பாளர்கள் சங்க நிர்வாகிகள் நக்கலாக விமர்சித்து பேசியதற்காக விஷாலை, தயாரிப்பாளர் சங்கம் கடந்த சில மாதங்களுக்கு முன் சஸ்பெண்ட் செய்தது. இந்த சஸ்பெண்டை எதிர்த்து விஷால் நீதிமன்றம் சென்றார். நீதிமன்றமும் தயாரிப்பாளர் சங்கத்தின் நடவடிக்கையை ஒன்றும் செய்யமுடியாது என்று கைவிரித்தது.
இதையடுத்து, சென்னை ஐகோர்ட்டில் விஷால் மேல் முறையீடு செய்திருந்தார். மேல்முறையீட்டு மனுவை விசாரித்த ஐகோர்ட்டு தயாரிப்பாளர்கள் சங்கத்தில் விஷாலை மீண்டும் சேர்த்துக் கொள்ள உத்தரவிட்டது. இதையடுத்து, தயாரிப்பாளர்கள் சங்கம் விஷாலின் சஸ்பெண்டை ரத்து செய்தது.
இந்நிலையில், வருகிற மார்ச் 5-ந் தேதி தயாரிப்பாளர்கள் சங்கத்திற்கு தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. விஷால் இதுவரையில் சஸ்பெண்ட் நடவடிக்கையில் இருந்ததால், இந்த தயாரிப்பாளர் சங்கத்தின் தேர்தலில் போட்டியிட முடியாத சூழ்நிலை இருந்து வந்தது. அவருக்கு பதிலாக ஏற்கெனவே, இவர்கள் அணிக்கு குஷ்பு தலைவர் பதவிக்கு போட்டியிடுவார் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், தற்போது விஷால் மீதான சஸ்பெண்ட் நடவடிக்கை தளர்த்தப்பட்டுள்ளதை தொடர்ந்து, விஷால் தயாரிப்பாளர்கள் சங்க தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிட முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. ஏற்கனெவே, தலைவர் பதவிக்கு போட்டியிடுவதாக அறிவித்திருந்த குஷ்பு, பொருளாளர் பதவிக்கும், ஞானவேல்ராஜா செயலாளர் பதவிக்கும் போட்டியிடுவார்கள் என்று தெரிகிறது.
இந்த தேர்தலில் கலைப்புலி எஸ்.தாணு தலைமையில் ஒரு அணி, கேயார் தலைமையில் ஒரு அணி, ஜே.கே.ரித்தீஷ் தலைமையில் ஒரு அணி, விஷால் தலைமையில் ஒரு அணி என நான்கு முனை போட்டிகள் நடைபெறவிருக்கிறது. நடிகர் சங்க தேர்தல் போல் இந்த தேர்தலும் இப்போதே சூடுபிடிக்க தொடங்கிவிட்டது.