அதிமுக பொதுச்செயலாளர் என்ற பதவியை ஜெயலலிதா இறந்து இருபத்தி ஐந்து நாட்களில் கைப்பற்றிய சசிகலாவினால், அதே ஜெயலலிதா அமர்ந்திருந்த முதல்வர் ஆசனத்தை பிடிக்க முடியாமல் இன்று வரை திணறி வருவதுதான் வேடிக்கை.
ஒன்றரைக் கோடி தொண்டர்களைக் கொண்ட இயக்கம் அதிமுக என்று மேடைதோறும் அந்த கட்சியின் முன்னணியினர் முழங்கி வந்தார்கள்.
ஆனால் அந்த கட்சியின் பொதுச்செயலாளரை வெறும் இரண்டாயிரத்து ஐநுாறு பொதுக்குழு உறுப்பினர்கள் ஒரே நாளில் தேர்ந்தெடுத்து முடிசூட்டு விழாவையும் நடத்தி விட்டார்கள்.
இதுதான் அதிமுகவின் அடிமட்டத் தொண்டர்களுக்கு கோபத்தை ஏற்படுத்தியது.பொதுச்செயலாளர் பதவிக்கு சசிகலா எப்படி வரலாம் என்ற எரிச்சல் இன்னும் அதிமுகவில் இருந்து கொண்டே உள்ளது.
அதிமுக பொதுச்செயலாளர் பதவியை கைப்பற்றிய உடனே முதல்வர் பதவி மீதுதான் சசிகலாவின் பார்வை சென்றது.சசிகலாவின் உறவுகளும், முதல்வர் பதவியை பன்னீர்செல்வம் வைத்திருப்பது, நமக்கு ஆபத்துதான்.
விசுவாசமாக பன்னீர் இருந்தாலும் மனிதனுக்கு மனம் மாற்றம் என்பது எப்போது நடக்கும். மத்திய அரசும் நீ முதல்வராக விரும்பாத நிலையில்தான் உள்ளது என்று எச்சரிக்கை செய்துள்ளனர்.
முதல்வராக பன்னீர்செல்வத்தின் செயல்பாடுகளும் இப்போது மக்கள் மத்தியில் ஒரு நன்மதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இது மன்னார்குடி குடும்பத்திற்கு கொஞ்சம் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
மத்திய அரசுக்கு எதிராக நடராஜன் கூறிய கருத்துகளால் மத்திய அரசு, பன்னீருக்கு ஆதரவான மனநிலையிலேயே உள்ளது. இதனால் உடனடியாக முதல்வர் பதவியை கைப்பற்றாவிட்டால், உட்கட்சியில் தனக்கு எதிரான அலை எழுவதை தவிரக்க முடியாததாகி விடும் என்று சசிகலா அச்சப்பட்டு வருகிறார்.
இந்த மாதமே முதல்வராக பதவி ஏற்கலாம் என்ற ஆலோசனையில் இப்போது மன்னார்குடி குடும்பத்தினர் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்கள்.
இந்நிலையில் தமிழக உளவுத்துறை சசிகலா தரப்பிற்கு கொடுத்த ரிப்போர்ட் தான் அவர்களை அப்செட் ஆக்கியுள்ளது.
ஜெயலிலதா மரணத்தில் மக்களின் முழு கோபமும் உங்கள் மீது தான் உள்ளது. குறிப்பாக அதிமுகவின் மிகப்பெரிய வாக்குவங்கியே பெண்கள்தான், அவர்கள் உங்களுக்கு எதிரான மனநிலையில்தான் உள்ளார்கள். அதிமுகவின் அடிமட்டத் தொண்டர்களும் உங்களை ஏற்றுக்கொள்ளாத நிலையில் அவர்கள் தீபாவின் பக்கம் சாயும் முடிவில் இருக்கிறார்கள் என்ற குறிப்பினை சொல்லியுள்ளார்கள்.
இதனால் சசிகலா தனது முதல்வர் கனவை எப்படி நனவாக்குவது என்ற ஆலோசனையில் இப்போது ஈடுபட்டுள்ளார்.
தனக்கு நெருக்கமானவர்களுடனும், குடும்பத்தினருடனும் தீவிரமாக ஆலோசனை செய்தவர், ஒருவேளை நான் பதவியேற்றால் அது மக்கள் மத்தியில் எந்தவித சலனத்தை ஏற்படுத்திவிட கூடாது. அதற்கு கருணாநிதி செய்யும் தந்திரத்தை நாமும் செய்ய வேண்டும்.மக்களுக்கு கவர்ச்சியை காட்டினால் தான் நம்மீது இருக்கும் கோபம் மறையும் என்று ஆலோசனை சொல்லியுள்ளார்கள்.
சசிகலாவும் அதை ஆமோதித்து ஓரே கையெழுத்தில் ஒட்டு மொத்த தமிழகத்தையும் திரும்பி பார்க்க வைக்க வேண்டும் என்று சொல்லியுள்ளார்.
அதற்கு இரண்டு திட்டங்களை இப்போது தயார் செய்து வருகிறார்கள்.
ஒன்று, ஒட்டுமொத்த பெண்களையும் கூல் செய்யும் விதத்தில் முதல்வராக பதவியேற்று மதுவிலக்கில் கையெழுத்து போடுவது அல்லது இளைஞர்களை கவர தேர்தலின்போது ஜெயலலிதா அறிவித்த வீட்டுக்கு ஒரு செல்போன் திட்டத்தில் கையெழுத்து போட்டு உடனடியாக அதை அமுல்படுத்துவது என்ற திட்டத்தில் இப்போது கார்டனில் ஆலோசனை செய்து வருகிறார்கள்.
செல்போன் நிறுவனங்களிடம் வாய்மொழியாக இது குறித்த விவரங்களை அதிகாரிகள் சேகரித்து கொடுத்துள்ளார்கள்.
ஒரே நேரத்தில் மதுவிலக்கை கொண்டு வந்தால் இப்போது இருக்கும் நிதி நெருக்கடியில் அதை எப்படி சமாளிப்பது என்று நிதித்துறை அதிகாரிகளிடமும் பேசியுள்ளார்கள்.
சசிகலாவின் இந்த மாஸ்டர் பிளான் திட்டம் முடிவுக்கு வந்ததும், பதவி ஏற்பு வைபவம் நடைபெறும் என்கிறார்கள் மன்னார்குடி உறவுகள்.
திட்டம் தீட்டி மக்களை கவரத் தயாராகிறார் சசிகலா.