சிறிலங்கா அரச தலைவர் கோட்டாபய ராஜபக்ச வழங்கிய உத்தரவுக்கு அமையவே அருந்திக பெர்னாண்டோ இராஜாங்க அமைச்சர் பதவியில் இருந்து விலகியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த நிலையில், ராகமை மருத்துவ பீட மாணவர்கள் தாக்கப்பட்ட சம்பவத்தை மாத்திரம் அடிப்படையாக கொண்டு, அருந்திக பெர்னாண்டோவை பதவி விலகுமாறு அரச தலைவர் உத்தரவிடவில்லை எனவும் எத்தனோல் கடத்தலுடன் சம்பந்தப்பட்ட வர்த்தகரை வெளிநாட்டில் இருந்து இலங்கைக்கு அழைத்து வந்து, பிணையில் விடுதலையாக வசதிகளை ஏற்படுத்திக்கொடுத்தமையும் இதற்கு காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் ராகமை மருத்துவப் பீட மாணவர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் சம்பவத்தை அடிப்படையாக கொண்டு அருந்திக பெர்னாண்டோ நேற்று முன்தினம் தனது பதவியை ராஜினாமா செய்தார்.
அரச தலைவரிடமிருந்து இந்த உத்தரவு கிடைத்ததும் அருந்திக பெர்னாண்டோ, பிரதமர் மகிந்த ராஜபக்சவை சந்தித்துள்ளார். அவர் பிரதமரின் எதிரில் அழுது புலம்பி, தன்னை காப்பாற்றுமாறு கேட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
எனினும் இந்த பிரச்சினையில் தலையிட முடியாது எனக் கூறி பிரதமர் மறுத்துள்ளார். இதனால், அருந்திக பெர்னாண்டோ இறுதியில் தனது இராஜாங்க அமைச்சர் பதவியை ராஜினாமா செய்ததாக பேசப்படுகிறது.