தென் கொரியாவுக்கு விஜயம் மேற்கொண்டுள்ள அமெரிக்க பாதுகாப்பு செயலாளர் ஜிம் மார்ட்டிஸ் தென் கொரிய நினைவுக் கல்லறைக்கு இன்று (வெள்ளிக்கிழமை) விஜயம் மேற்கொண்டார்.
இதன்போது, 1950 மற்றும் 1953 ஆம் ஆண்டு கொரிய போரின்போது உயிரிழந்த வீரர்களுக்கு மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.
முன்னதாக தென் கொரிய பாதுகாப்பு அமைச்சர் ஹான் மின் கூவினை சந்தித்து கலந்துரையாடிய ஜிம் மார்ட்டிஸ் சியொலில் அமெரிக்காவின் ஆதரவினை உறுதிப்படுத்தியதுடன் ஆணு ஆயுத பாவனைகளுக்காக வடகொரியாவுக்கு எச்சரிக்கையும் விடுத்திருந்தார்.
வட கொரியா புதிய தொலைதூர ஏவுகணை ஒன்றை சோதனை செய்யவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில் வட கொரியாவின் இந்த ஏவுகணை சோதனைகள் ட்ரம்ப் தலைமையிலான அமெரிக்க புதிய நிர்வாகத்திற்கு ஆரம்ப சவாலாக அமையவுள்ளது. இந்நிலையில் அமெரிக்க பாதுகாப்பு செயலாளரின் தென் கொரிய விஜயம் இடம்பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.