இந்தியாவுக்கான மூன்று நாள் உத்தியோகபூர்வ பயணத்தை இலங்கையின் வெளியுறவு அமைச்சர் ஜி.எஸ் பீரிஸ் இன்று ஆரம்பிக்கிறார்.
இருநாட்டு உறவைப் பலப்படுத்தல் மற்றும் வர்த்தக உறவுகள் குறித்த சந்திப்புக்களுக்காகவே அவர் இந்தியாவுக்கு பயணம் செய்கிறார்.
இந்தியாவில் அவர், இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ். ஜெய்சங்கரை சந்திக்கவுள்ள அவர், இருதரப்பு வர்த்தக உறவுகளை மேம்படுத்துவது குறித்து ஆராயவுள்ளார்.
அத்துடன் அவர் இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் டோவாலையும் சந்திக்கவுள்ளார்.
இந்தியாவினால் இலங்கைக்கு 400 மில்லியன் டொலர்கள் நாணய பரிமாற்ற உதவி மற்றும் பொருளாதார மேம்பாட்டுக்கான 500 மில்லியன் டொலர்கள் உதவி என்பவற்றுக்கு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ள நிலையிலேயே இலங்கை வெளியுறவு அமைச்சரின் இந்திய பயணம் அமைகிறது.
இரண்டு நாடுகளின் வெளியுறவு அமைச்சர்களும் ஏற்கனவே கடந்த செப்டம்பரில் நியூயோர்க்கில் சந்தித்து கலந்துரையாடல்களை நடத்தியிருந்தனர்.
இதனையடுத்து இலங்கையின் நிதியமைச்சர் பசில் ராஜபக்ச, கடந்த டிசம்பரில் இந்தியாவுக்கு சென்று திரும்பினார்.
இதேவேளை இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் டோவாலை, இந்தியாவுக்கான இலங்கையின் உயர்ஸ்தானிகர் மிலிந்த மொரகொட கடந்த வியாழக்கிழமையன்று சந்தித்து கலந்துரையாடியிருந்தார்.
அத்துடன் இந்தியாவினால் இலங்கைக்கு ஒரு லட்சம் என்டிஜன் சோதனை கட்டளைகள் கடந்த வெள்ளிக்கிழமை, வழங்கப்பட்டுள்ளன.
அத்துடன் கடுமையான நிதி நெருக்கடியை எதிர்கொண்டுள்ள இலங்கையின் டொலர் பிரச்சினையை சமாளிப்பதற்காக இந்தியா 2.415 பில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்க உறுதியளித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.