மின்சாரப் பிரச்சினைக்குப் பின்னால் சதி இருக்கிறது எனவும் மக்களைக் கொன்று, இறந்தவர்களின் உடல்களை வைத்து அரசியல் செய்ய முயற்சிக்க வேண்டாம் என ஆளும் தரப்பு பிரதம கொரடா நெடுஞ்சாலைகள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னான்டோ (Johnston Fernando) தெரிவித்தார்.
குருநாகல் மாவட்டத்திற்கான 100,000 திட்ட கிராம அபிவிருத்தி வேலைத்திட்டத்தை ஆரம்பித்து வைத்து நிக்கவெரட்டியவில் நடைபெற்ற கூட்டத்தில் உரையாற்றும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார். இது தொடர்பில் மேலும் உரையாற்றிய அமைச்சர்,
எரிவாயுப் பிரச்சினையே பின்னால் யாரோ இருப்பதாக சொன்னேன். அப்போது என்னை விமர்சித்தார்கள். இப்போது எரிவாயு வெடிப்பதை பார்த்திருக்கிறீர்களா? என்று கேள்வியெழுப்பினார்.
மின்சாரத்திலும் இதே போன்ற பிரச்சினை உள்ளது. மாதக்கணக்கில் மூடப்படுகிறது. இந்த மின் நெருக்கடிக்குப் பின்னால் ஏதோ இருக்கிறது என்பதை மக்கள் உணரவில்லையா? இதன் பின்னணியில் சதி உள்ளது.
அரச தலைவர் கோட்டாபய ராஜபக்சவின் கொள்கைகளை நடைமுறைப்படுத்த இடமளிப்பதில்லை . மக்களை கொன்று பிணங்களை வைத்து அரசியல் செய்ய முயலாதீர்கள். மின்சாரத்தைத் துண்டித்து அதிகாரத்தைப் பெற முயலாதீர்கள். அவை தவறான செயல்களாகும் எனவும் பெர்னான்டோ தெரிவித்துள்ளார்.
தேவாலயத்தில் வெடிகுண்டு வைத்தவர்தான் பெல்லன்வில கோவிலில் வெடிகுண்டு வைத்தவர். வைத்தியசாலையில் வெடிகுண்டு வைத்ததும் அதே மனிதர் தான். குண்டு வெடித்திருந்தால் தேசிய பாதுகாப்பு பற்றி கோட்டாபய பேசுவதில் பயனில்லை என்பார்கள் என்றார்.
வழிபாட்டுத் தலங்கள் மற்றும் வைத்தியசாகளில் வெடிகுண்டுகளை வைப்பதன் நோக்கம் நாட்டில் பாதுகாப்பு இல்லை என்பதை உலகுக்குக் காட்டுவதாகும் என தெரிவித்துள்ளார்.