புதிய அரசாங்கத்தை தெரிவு செய்து நாட்டு மக்கள் வைத்த நம்பிக்கையை சிதைக்க எந்த வகையிலும் இடமளிக்க போவதில்லை என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
எப்படியான அரசியல் நிலைப்பாடுகளை கொண்டிருந்தாலும் அரசாங்கத்தின் வேலைத்திட்டத்திற்கு ஆதரவு வழங்குவது சகல அரசியல் கட்சிகளினதும் பொறுப்பாகும் எனவும் ஜனாதிபதி கூறியுள்ளார்.
மட்டக்களப்பு ஏறாவூர் அலிஹார் விளையாட்டு மைதானத்தில் நடைபெற்ற கூட்டத்தில் உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
ஆட்சியில் இருந்தவர்கள் செய்தது போல் கொள்ளையடிப்புகள், வன்முறைகள், ஊழல், மோசடிகளை ஈடுபட அரசாங்கத்தை மக்கள் ஆட்சிக்கு கொண்டு வரவில்லை.
இந்த அரசாங்கத்தில் தவறான வேலைகளை செய்பவர்கள் யார் என்பதை மக்கள் அறிவார்கள். இதனால், எதிர்காலத்தில் தீர்மானங்களை எடுக்க நேரிடும்.
ஆட்சியில் இருந்த போது அரச சொத்துக்களையும் வளங்களையும் திறைசேரியையும் தனிப்பட்ட தேவைக்கு பயன்படுத்தியவர்கள் தமக்கான சிறப்புரிமைகளை மீட்டெடுக்க மீண்டும் ஆட்சிக்கு வர முயற்சித்து வருகின்றனர்.
5 வருடங்களின் பின்னர் தேர்தலில் மக்களின் விருப்பத்திற்கு அமைய அரசாங்கம் மாற்றமடையுமே தவிர அதற்கு முன்னர் எவராலும் அரசாங்கத்தை மாற்ற முடியாது.
தற்போதைய அரசாங்கம் பல வருடங்களை கடந்த அரசாங்கம் அல்ல. பதவிக்கு வந்து இரண்டு ஆண்டுகளே கடந்துள்ளன.
அரசாங்கம் என்ற வகையில் வேலைகளை செய்ய காலம் இருந்த போதிலும் நாடு மற்றும் மக்களுக்காக நிறைவேற்ற வேண்டிய பொறுப்பை இன்றே நிறைவேற்றுவோம்.
வலுவான அரசாக முன்னோக்கி சென்று நாட்டை அபிவிருத்தியடைந்த நாடாக கட்டியெழுப்புவோம்.
ஜனாதிபதி என்ற வகையில் வறிய மக்களின் குரல்களுக்கு செவி கொடுக்க எப்போதும் தயாராக இருக்கின்றேன் எனவும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.