இலங்கை மக்கள் இன்று தங்கள் நாட்டின் 69வது சுதந்திர தினத்தைக் கொண்டாடுகின்றனர்.
நாட்டை ஆக்கிரமிப்புச் செய்திருந்த ஆங்கிலேயர்களிடமிருந்து எமது தலைவர்கள் இரத்தம் சிந்தாப் புரட்சியின் மூலம் 1948 பெப்ரவரி 4ம் திகதி சுதந்திரத்தைப் பெற்றுக்கொண்டனர்.
எம்மை நாமே ஆளும் உரிமை 69 வருடங்களுக்கு முன்னர் எமக்குக் கிடைத்தது. அன்று முதல் ஜனநாயக வழிகளில் தெரிவு செய்யப்பட்ட எமது தலைவர்களால் நாட்டில் ஆட்சி நடத்தப்பட்டு வருகின்றது.
மக்களாட்சியின் மூலம் கடந்த காலத்தில் நாட்டை கட்டியெழுப்ப எமது மூத்த தலைவர்கள் பெரும் தியாகங்களைப் புரிந்துள்ளனர்.
ஆங்கிலேயர்களால் அடிமைப்படுத்தப்பட்ட நாட்டு மக்களை சுதந்திரப் பறவைகளாக வாழும் உரிமையை பெற்றுக்கொடுத்த எமது சுதந்திர போராட்ட வீரர்களை இவ்வேளையில் நாம் நினைத்துப் பார்க்கின்றோம்.
அடக்கியாளப்பட்ட மக்கள் சுதந்திரக் காற்றை சுவாசிக்கும் வாய்ப்பை 1948 பெப்ரவரி 4ல் பெற்றுக்கொண்டு சுயமான பயணத்தை மேற்கொண்டு வந்த நிலையில் எவருமே விரும்பாத கசப்பான சம்பவங்கள் தலைதூக்க ஆரம்பித்தன.
பல்லின மக்கள் வாழும் நாட்டில் எங்கிருந்தோ வந்து புகுந்து கொண்ட இன முறுகலும், இனவாதமும் படிப்படியாக தலை விரித்தாடத் தொடங்கியது.
வடக்கென்றும், தெற்கென்றும் கிழக்கு என்றும் பிரதேச வாதங்களும் மிக மோசமான வகையில் தலைதூக்கியதை வரலாற்று நெடுகிலும் காணக்கூடியதாகவே இருந்து வந்துள்ளது.
இந்து சமுத்திரத்தின் முத்தாக வர்ணிக்கப்படும் இலங்கை கலாசார விழுமியங்களைக் கொண்ட ஒழுக்கமுள்ள சமூகங்கள் வாழும் ஒரு நாடாகவே உலகளாவிய மட்டத்தில் உயர்வாகப் பார்க்கப்பட்டு வந்தது.
இவ்வாறு அழகான மண்ணில் வாழும் மக்களும் இனத்தால், மொழியால், மதத்தால் வேறுபட்டிருந்தபோதிலும் கூட நல்லிணக்கத்துடன் வாழ்ந்த காலமொன்றும் இருக்கவே செய்தது.
ஆனால் பிற்பட்ட காலத்தில் மதவாதமும், இனவாதமும் நாட்டை பாரிய பின்னடைவுக்குள் தள்ளிவிட்டிருந்தது. அந்த பேரழிவிலிருந்து மீட்சி பெற முடியாமல் இன்றளவும் நாம் தடுமாறிக்கொண்டிருக்கின்றோம்.
ஒரு நாட்டின் சனத்தொகையினரில் குறிப்பிட்ட ஒரு பிரிவினர் தமக்குரிய சுதந்திரத்தை அனுபவிக்க முடியாத உணர்வில் காணப்பட்டால், அந்த நாட்டில் உண்மையான சுதந்திரம் உறுதி செய்யப்படவில்லை என்பதே அர்த்தமாகும்.
அவ்வாறான சூழ்நிலையில் அந்த நாடு அபிவிருத்தி முன்னேற்றம் காண முடியும் என எதிர்பார்க்க முடியாது. அத்துடன் சரியான இலக்கு நோக்கிய பயணத்தைத் தொடரவும் இயலாது.
அத்தகையதொரு மனநிலையிலேயே கடந்த மூன்று தசாப்த காலமாக எமது நாட்டு மக்களில் ஒரு சாரார் காணப்பட்டு வருகின்றனர்.
நாட்டில் ஜனநாயக ஆட்சி இருந்தாலும் கூட அங்கு ஜனநாயகம் உரிய முறையில் பேணப்படுகின்றதா என்பது கேள்விக்குறியானதாகும்.
ஜனநாயக சுதந்திரம் என்பது ஒரு தரப்புக்கு மட்டுமானதாக இருக்க முடியாது. அது நாட்டில் வாழும் சகல இன மக்களுக்கும் உரித்துடையதாகவும், பொதுவானதாகவும் அமையப்பெற வேண்டும்.
ஆனால் இங்கு இனவாதத் தீ கொழுந்து விட்டெரியச் செய்ததன் பின் விளைவுகள் இனம், மொழி சார்ந்த சமூகங்கள் சுதந்திரக் காற்றை சுவாசிக்க முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கின்றனர்.
ஆட்சி அதிகாரம் அபிவிருத்தி உள்ளிட்ட சகல மட்டத்திலும் சகல இனத்தவர்களுக்கும் சமநீதி வழங்கப்படுவதன் மூலமே உண்மையான சுதந்திரத்தை உறுதி செய்ய முடியும்.
அதனூடாகத்தான் நாடு சமூக, பொருளாதார ரீதியில் முன்னேற்றம், மேம்பாடு காணவும் முடியும். ஆனால் நடைமுறையில் எம்மால் அதனை காணமுடியாத நிலை தொடர்ந்த வண்ணமே உள்ளது.
பல்லின, பலமத கலாசாரப் பின்னணியைக் கொண்ட மக்கள் வாழும் எமது நாட்டில் குறைந்தபட்சம் இன விகிதாசார ரீதியிலாவது மக்கள் உள்ளீர்க்கப்பட வேண்டும்.
எழுத்திலும், பேச்சிலும் அது தாராளமாகவே காணப்படுகிறது. ஆனால் செயற்பாட்டில், நடைமுறையில் காணப்படவில்லை.
பெரும்பான்மை சமூகத்தை பிரதான அரசியல் தளமாகக் கொண்ட முகாம்களில் சிறுபான்மைச் சமூகங்கள் இரண்டாம் தரப்பினராக நோக்கப்படுவதை காலா காலமாக அவதானிக்க முடிகிறது.
பெரும்பான்மைக் கட்சிகள் தேசியவாதம் என்ற சொல்லாடலைக் கொண்டு சிந்திக்க முற்பட்டதன் விளைவுகளே சிறுபான்மைச் சமூகங்களின் புறக்கணிப்புக்கு முக்கிய காரணியாக அமையப்பெற்றுள்ளது.
அவ்வாறானதொரு புறக்கணிப்பின் விளைவு சிறுபான்மைச் சமூகங்களை தனித்துச் செயற்படத் தூண்டியது.
சிறுபான்மை இனத்தை பெரும்பான்மைச் சமூகம் அரவணைத்துச் செயற்பட முன்வந்திருந்தால், நாட்டில் இன, மத, மொழி ரீதியிலான சிந்தனைகள் தலைதூக்கி இருக்க முடியாது.
பதிலாக நாம் இலங்கையர் என்ற கோட்பாடு வலுவடைந்திருக்க முடியும். ஒரே தேசம் ஒரே இனம் என்ற கோட்பாடு உறுதிப்படுத்தப்பட்டிருக்கும்.
நல்லிணக்கம், இன ஒற்றுமை என அரசுகள் கீறல் விழுந்த ஒலித்தட்டையே தொடர்ந்து உச்சரித்த வண்ணம் காணப்படுகின்றன. உண்மையான யதார்த்த ரீதியிலான எண்ணப்பாடு அவர்களிடம் காணப்படுவதாக தெரியவில்லை.
முரண்பாடுகளும், மோதல்களும் உருவானதன் பின்னர் அதற்கான பழியைக் கூட சிறுபான்மைச் சமூகத்தின் மீது சுமத்தும் கைங்கரியத்தையும் இனவாதச் சக்திகளே தூக்கிப் பிடித்து வருகின்றன.
இந்த பின்னடைவுகள் தொடரக்கூடாது. மாற்றத்தின் அவசியத்தை நல்லாட்சி அரசு உணரத் தொடங்கியுள்ளது.
இந்த 69வது சுதந்திர தினத்தின் பிரகடனம் முழுநாடும் இனம், மதம், மொழி பேதங்களை கடந்த ஒரே தேசமாக மிளிர வேண்டுமென்பதாக இருக்க வேண்டும்.
அது எழுத்தில், சொல்லில் மட்டுமல்ல செயற்பாடுகளிலும் மேலோங்கி இருத்தல் அவசியமானதாகும்.
இந்த 69வது சுதந்திரத்தின் அடிநாதமாக அது அமையப்பெற்று 2017க்குள் முழு நாட்டையும் வெல்லக்கூடியதான சமாதானப் புரட்சி மேலோங்க வேண்டும்.
அதற்கான முனைப்புகளில் சகல இன மக்களும் ஒன்றுபட்டு ஈடுபாடு காட்டவேண்டும்.
அடுத்த 70 வது சுதந்திர தினத்தில் சகல இன மக்களும் ஒரே குரலில் “நாம் இலங்கையர்” என்ற கோஷத்தை முழங்குபவர்களாக மாற வேண்டும் என்று பிரார்த்திப்போமாக!