இந்தியாவில் நடைபெற இருக்கும் டெஸ்ட் போட்டிகளின் போது ஆஸ்திரேலியாவின் பொது எதிரியாக விராட் கோலி இருப்பார் என முன்னாள் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் மைக்கேல் ஹஸி தெரிவித்துள்ளார். இதோடு கோலியை எக்காரணம் கொண்டும் சீண்ட வேண்டாம், அதுவே அவரை மேலும் சிறப்பாக செயல்பட வைக்கும் என அவர் தெரிவித்துள்ளார்.
மற்ற ஆஸ்திரேலிய வீரர்களை விட ஆசிய மைதானங்களில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருக்கும் மைக்கேல் ஹஸி ஆஸ்திரேலிய வீரர்கள் விராட் கோலியை சீண்டினால் அதற்கான விளைவுகளை சந்திக்க நேரிடும், இதனால் அவரை சீண்டாமல் போட்டியில் அவரை எப்படி வெளியேற்றுவது என்பதில் மட்டும் கவனம் செலுத்த வேண்டும் என தெரிவித்துள்ளார்.
ஆஸ்திரேலியனாக பார்க்கும் போது நமது முதல் எதிரியாக விராட் கோலி இருக்கிறார், அவரை வேகமாக பெவிலியனுக்கு அனுப்ப வேண்டும். விராட் கோலி சிறப்பான போட்டியாளர், கடைசி வரை போராடும் குணம் கொண்டவர் என ஹஸி தெரிவித்துள்ளார்.
இந்திய மண்ணில் உங்களால் சுழற்பந்தை விளையாட முடியவில்லை என்றால், இந்தியா செல்லாதீர்கள் என்று இங்கிலாந்து அணியின் முன்னாள் பேட்ஸ்மேன் கெவின் பீட்டர்சன் ஆஸ்திரேலியாவுக்கு அறிவுரை வழங்கியிருந்தார். ஆஸ்திரேலியாவை பொருத்த வரை 2014-ற்குப்பிறகு ஆசியாவில் நடைபெற்ற 20 டெஸ்ட் போட்டிகளில் மூன்று போட்டிகளை மட்டுமே ஆஸ்திரேலியா வென்றுள்ளது. இதில் இரு வெற்றிகள் வங்காள தேசத்திற்கு எதிரானது என்பதும் குறிப்பிடத்தக்கது.