திருகோணமலை தலைமையக பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் 3 சிறுவர்கள் உட்பட இருவர் பலத்த காயங்களுடன் திருகோணமலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக திருகோணமலை தலைமையக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த விபத்து கண்டி வீதி இலிங்க நகர் பகுதியில் ஐஓசி எரிபொருள் நிலையத்திற்கு முன்பாக இன்று நண்பகல் இடம்பெற்றுள்ளது.
திருகோணமலை கண்டி வீதியினூடாக நகர் புரத்தை நோக்கி வருகை தந்த சொகுசு கார் ஒன்று திருகோணமலை ஐஓசி எரிபொருள் நிலையத்தில் எரிபொருள் நிரப்புவதற்காக வலது பக்கம் திரும்பியபோது திருகோணமலை நகர்ப்பகுதியில் இருந்து வந்த முச்சக்கரவண்டி காருடன் மோதி கெப் ரக வாகனத்தில் மோதியதில் இந்த விபத்து நேர்ந்துள்ளதாக ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
இதன்போது முச்சக்கரவண்டியில் பயணித்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று சிறுவர்கள், சிறுவர்களின் தாய் மற்றும் முச்சக்கரவண்டி சாரதி காயங்களுடன் திருகோணமலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இவ் விபத்து தொடர்பிலான மேலதிக விசாரணைகளை திருகோணமலை தலைமையக பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.