பயங்கரவாத தடுப்புச் சட்டத்தை முழுமையாக நீக்குமாறு வலியுறுத்தி கையெழுத்து திரட்டும் நடவடிக்கையில் இலங்கை தமிழ் அரசுக்கட்சி களமிறங்கவுள்ளது.
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளர் எம்.ஏ சுமந்திரனின் ஏற்பாட்டில், எதிர்வரும் 16ஆம் திகதி செவ்வாய்க்கிழமை முற்பகல் 11 மணிக்கு கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்துக்கு முன்பாக இக்கையெழுத்து வேட்டை நடைபெறவுள்ளது.
இதில் அரசியல் பிரமுகர்கள், மனித உரிமை செயற்பாட்டாளர்கள், கட்சியின் முக்கியஸ்தர்கள் எனப் பலரும் பங்கேற்கவுள்ளனர்.
ஐ.நா மனித உரிமைகள் சபையின் 49ஆவது கூட்டத்தொடர் இம்மாத இறுதியில் ஆரம்பமாகவுள்ளது.
இந்த நிலையில், 1979ஆம் ஆண்டின் 48ஆம் இலக்க பயங்கரவாத தடுப்புச் சட்ட, திருத்தச் சட்டமூலத்தை வெளிவிவகார அமைச்சர் ஜி.எல். பீரிஸ் கடந்த 10 ஆம் திகதி நாடாளுமன்றத்தில் முன்வைத்தார்.
எனினும் நடைமுறையில் உள்ள சட்டத்திற்கும் புதிதாக முன்வைக்கப்பட்ட சட்டத்திருத்தங்களுக்கும் இடையில் பாரிய வித்தியாசம் எதுவும் இல்லை என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
எனவே மேற்படி சட்ட மூலம் முழுமையாக மாற்றியமைக்கப்பட வேண்டும் அல்லது தற்போது நடைமுறையில் உள்ள பயங்கரவாத தடைச் சட்டம் முழுமையாக நீக்கப்படவேண்டும் வலியுறுத்தியே இந்தக் கையெழுத்து வேட்டை இடம்பெறுகின்றமை குறிப்பிடத்தக்கது.