இலங்கையின் 69ஆவது சுதந்திர தின நிகழ்வுகள் காலி முகத்திடலில் இன்று (சனிக்கிழமை) காலை ‘தேசிய ஒற்றுமை’ எனும் தொனிப்பொருளில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் நடைபெற்று வருகிறது.
குறித்த நிகழ்வில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, எதிர்க்கட்சி தலைவர் இரா.சம்பந்தன், சபாநாயகர் கருஜயசூரிய மற்றும் அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர், வெளிநாட்டு தூதுவர்கள் என பல முக்கியஸ்தர்கள் கலந்துக் கொண்டுள்ளனர்.
சுதந்திர தின நிகழ்வின் முதலாவது அம்சமாக வழமைபோன்று முப்டையினர் மற்றும் பொலிஸாரின் அணிவகுப்பு இடம்பெறவுள்ளது. மரியாதை அணிவகுப்பில் சுமார் 8 ஆயிரம் சிப்பாய்கள் கலந்துகொள்ளவுள்ளனர்.
இதனைத் தொடர்ந்து இராணுவம், விமானப் படை மற்றும் கடற்படை ஆகிய படைகளின் யுத்த உபகரணங்களை காட்சிப்படுத்தும் வகையில் கனரக வாகனங்களின் ஊர்வலம் மற்றும் சாகச நிகழ்வுகளும் இடம்பெறவுள்ளது.
அதேபோன்று இம்முறையும் தேசிய கீதம் சிங்களம், தமிழ் ஆகிய இரு மொழிகளிலும் இசைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, சுதந்திர தின நிகழ்வுகளை முன்னிட்டு காலி முகத்திடல் மற்றும் அதனை அண்மித்த பகுதிகளில் சுமார் இரண்டாயிரத்திற்கும் அதிகமான பொலிஸார் ஈடுபடுத்தப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.