ஆண்டுதோறும் பிப்ரவரி 4-ந்தேதி உலக புற்றுநோய் தினம் அனுசரிக்கப்பட்டு வருகிறது. 2016-ம் ஆண்டு தொடங்கி 2018-ம் ஆண்டு வரைக்கும் ‘நம்மால் முடியும்.. என்னால் முடியும்..’ என்ற கருத்தை அடிப்படையாகக் கொண்டு புற்றுநோய் தினம் கடைபிடிக்கப்படுகிறது. உலக அளவில் அதிகரித்துவரும் புற்றுநோயின் தாக்கத்தை குறைப்பதற்கு ஒவ்வொருவரும் கூட்டாகவும் தனிநபராகவும் செய்ய வேண்டிய முயற்சிகளை வலியுறுத்துவதே இக்கருத்தின் நோக்கமாகும்.
நம்மால் முடியும்..
புற்றுநோய்க்கு எதிராக அரசாங்கம், மருத்துவ அமைப்புகள் மற்றும் மக்கள் சமூகம் ஆகியவை இணைந்து கூட்டாக மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகளைப் பார்ப்போம்.
சிறந்த வாழ்க்கைச்சூழல் :
புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்கள் உயிர்வாழ்வதற்கு ஏற்ற ஒரு சூழலை உருவாக்க வேண்டும். இதனால் புற்றுநோயால் இறப்பவர்களின் எண்ணிக்கையை குறைக்க முடியும்.
நோய்த்தடுப்பு முறைகள் :
வாழ்க்கை முறைக்கும் புற்றுநோய்க்கும் மிக நெருக்கமான தொடர்பு இருக்கிறது. புகைப்பிடித்தல், போதுமான அளவு உணவு சாப்பிடாமல் இருப்பது, மது அருந்துதல் ஆகியவற்றால் புற்றுநோய் தாக்கும் வாய்ப்புகள் அதிகமாக உள்ளது. இவற்றை தவிர்ப்பதன் மூலமாக புற்றுநோய் வராமல் தடுக்கலாம்.
சுகாதாரமான நகரங்கள்:
நகரங்களையும் பணிபுரியும் இடங்களையும் சுகாதாரமான வகையில் பராமரிக்க வேண்டும்.
விழிப்புணர்வை உருவாக்குதல் :
புற்றுநோய் பற்றிய அச்சத்தை தவிர்த்து அதைப்பற்றி அனைவரும் அறிந்துகொள்ளும் வகையில் விழிப்புணர்வை உருவாக்க வேண்டும். நோய் வருவதற்கான காரணங்கள், வந்தபின் எடுத்துக்கொள்ள வேண்டிய சிகிச்சை முறைகள் ஆகியவை பற்றி தயக்கமின்றி உரையாட ஊக்குவிக்க வேண்டும்.
அனைவரும் சிகிச்சை பெறும் வாய்ப்பு :
புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்கள் குறைந்த செலவில் தேவையான சிகிச்சைகளைப் பெறுவதற்கான வாய்ப்புகளை உருவாக்க வேண்டும்.
கொள்கை திட்டங்களை உருவாக்குதல் :
புற்றுநோய்க்கு காரணமாக இருக்கும் புகையிலை, மது, சுகாதாரம் இல்லாத உணவு, சுற்றுச்சூழல் மாசுபாடு ஆகியவற்றை கட்டுப்படுத்தும் வகையில் அரசாங்கம் விதிமுறைகளை உருவாக்க வேண்டும்.
புற்றுநோயை முன்கூட்டியே கண்டறியவும், சிகிச்சை செய்யவும், கட்டுப்படுத்தவும் தேவையான நிதி ஆதாரங்களை உருவாக்க வேண்டும்.
கூட்டு நடவடிக்கை :
புற்றுநோயை தடுக்க வேண்டியதன் அவசியத்தை உணர்ந்து மக்கள் அமைப்புகள் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும்.
என்னால் முடியும்..
நோயால் பாதிக்கப்பட்டவர்களும் மற்றவர்களும் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகளைப் பார்ப்போம்.
புற்றுநோய்க்கான வாய்ப்புகளை குறைத்தல் :
புகைப்பிடித்தல், மது அருந்துதல் ஆகியவற்றை தவிர்க்க வேண்டும். சுகாதாரமான உணவுகளை மட்டுமே சாப்பிட வேண்டும்.
ஆரம்ப நிலையிலேயே நோயை கண்டறிதல் :
சில சமயங் களில் புற்று நோயை முன்கூட்டியே அறிந்துகொள்ளும் அறிகுறிகள் தென்படுவதில்லை. எனவே உடல்நலம் பற்றிய அக்கறையோடு இருக்க வேண்டும். புற்றுநோய்க்கான அறிகுறிகள் இருந்தால் உடனடியாக காலம் தாமதிக்காமல் சிகிச்சை எடுத்துக்கொள்ள வேண்டும்.
நோயால் பாதிக்கப்பட்டவருக்கு அன்பு காட்டுதல் :
புற்றுநோயால் தாக்கப் பட்டவர்களின் உடல்நலம் மட்டுமின்றி மனநலமும் கடுமையான பாதிப்புக்கு உள்ளாகிறது. எனவே குடும்பத்தினரும் நண்பர்களும் நோயால் பாதிக்கப்பட்டவரோடு அன்பாகவும் ஆதரவாகவும் இருக்க வேண்டும். புற்றுநோய்க்கு எதிரான கூட்டு நடவடிக்கையில் ஒவ்வொருவரும் தனியாகவும் கூட்டாகவும் முயற்சிகள் செய்வோம்.