கற்பிட்டி அல்–அக்ஷா தேசியப் பாடசாலையில் முதலாம் தரத்துக்கு தனது பிள்ளையை அனுமதிக்கவில்லை என்பதை ஆட்சேபித்தும், அதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் தந்தையொருவர் தனது பிள்ளையுடன் புதன்கிழமை (01) பாடசாலைக்கு முன்னால் கவனயீர்ப்பு ஆர்ப்பட்டத்தில் ஈடுபட்டார்.
கற்பிட்டி அல்- அக் ஷா தேசியப் பாடசாலையில் முதலாம் தரத்திற்கு மாணவர்களை சேர்த்துக்கொள்வதற்காக கேட்கப்பட்ட சகல ஆவணங்களும் கையளிக்கப்பட்ட நிலையில் தனது பிள்ளையின் அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாகவும், அதற்கு நீதி பெற்றுத் தருமாறும் கோரியே தந்தையும், அவரது மகளும் ஒன்றாக இணைந்து கவனயீர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.
அதன் பின்னர் அங்கு வருகை தந்த பிரதேச அரசியல் பிரமுகர்களினால் வழங்கப்பட்ட வாக்குறுதிகளையடுத்து, தந்தை தான் முன்னெடுத்திருந்த கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தை தற்காலிகமாகக் கைவிட்டார். எனினும் தனக்கு நீதி கிடைக்காது போனால் தொடர்ச்சியான உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபடப்போவதாகவும் அவர் எச்சரித்துள்ளார்.
மேற்படி பாடசாலையில் முதலாம் தரத்திற்கு மாணவர்களை இணைத்துக்கொள்வதற்காக 129 பேர் விண்ணப்பித்திருந்தனர். இவ்வாறு விண்ணப்பித்தவர்களில் இருந்து நடத்தப்பட்ட நேர்முகத் தேர்வில் 78 மாணவர்களே தெரிவுசெய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.