சரும வறட்சி பரம்பரைத் தன்மையால் இயற்கையாகவே சிலருக்கு வரும். மருந்துகள், மாத்திரைகள் தொடர்ந்து எடுத்துக் கொள்கிறவர்களுக்கும் சரும வறட்சி ஏற்படும். பருக்கள் பிரச்னைக்கு சிகிச்சை எடுத்துக் கொள்பவர்கள், அதிக நேரம் பயணத்தில் இருக்கிறவர்களுக்கும் இதே பிரச்சனை வரலாம். இந்த வறட்சியைத் தடுக்கக் குளித்து முடித்தவுடன் மாயிச்சரைஸர் போட்டுக் கொள்ளலாம். அதிகம் பயன்படுத்தினால் வியர்க்குரு வரும் வாய்ப்பு உண்டு என்பதையும் மறக்கக் கூடாது.
என்னென்ன சருமப் பிரச்னைகளை உடனடியாகக் கவனிக்க வேண்டும்?
இது தனி நபரின் உடல் அமைப்பைப் பொறுத்தது. சிலருக்கு முகம் முழுவதும் பருக்கள் இருந்தாலும் அது ஒரு பிரச்சனையாக இருக்காது. அழகியல் விஷயத்தில் கவனமாக இருப்பவர்கள் சின்ன சுருக்கம் ஏற்பட்டாலும் உடனடியாக மருத்துவரைத் தேடி வந்துவிடுவார்கள்.
முடி கொட்டுகிற பிரச்சனைக்குக் கூட முதலிலேயே சிகிச்சை பெற்றுக் கொண்டு விடுவது நல்லது. முடி நிறைய கொட்டிய பிறகு சிகிச்சை எடுத்துக் கொண்டால் அதற்கேற்றவாறுதான் பலன் கிடைக்கும். 40 வயதில் சேதம் அடைந்துவிட்டது என்று வருவதைவிட 30 வயதிலேயே பார்ப்பது சிறந்தது.