ராம் சரண் நடிப்பில் ஷங்கர் இயக்கத்தில் உருவாகி வரும் படத்தின் படப்பிடிப்பில் கட்டுப்பாடுகளுடன் நடந்து கொள்ள வேண்டும் என்று ரசிகர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
தெலுங்கு திரையுலுகில் முன்னணி நடிகராக இருப்பவர் நடிகர் ராம் சரண். இவர் நடிப்பில் வெளியான மகதீரா, யவடு, துருவா, ரங்கஸ்தலம் போன்ற பல படங்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்தார். இவர் தற்போது இயக்குனர் ஷங்கர் இயக்கும் படத்தில் நடித்து வருகிறார். இப்படத்திற்கு தற்காலிகமாக ‘ராம்சரண் 15’ எனப் பெயரிடப்பட்டுள்ள இப்படத்தை ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் சார்பில் தில் ராஜு தயாரிக்கிறார். இப்படத்தின் கதையை கார்த்திக் சுப்புராஜ் எழுதி, தமன் இசையமைக்கிறார். இப்படத்தில் ராம் சரண் இரட்டை வேடங்களில் நடித்து வருவதாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில் ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் தயாரிப்பு நிறுவனம் சமூக வலைத்தளத்தின் மூலம் ரசிகர்களுக்கு வேண்டுகோள் வைத்துள்ளது. அதில், “ராம்சரண் 15′ படத்தின் படப்பிடிப்பு திறந்த வெளியில் மக்கள் கூட்டத்துடன் நடைபெற்று வருகிறது. இதனால் ரசிகர்கள் கட்டுப்பாட்டுடன் நடந்துகொள்ளும்படி கேட்டுக்கொள்கிறோம். படப்பிடிப்புத் தளத்தில் அனுமதியின்றி எடுக்கப்படும் புகைப்படங்கள் மற்றும் விடியோக்களைப் சமூக வலைதளங்களில் பதிவிடாதீர்கள். இதனை மீறி பதிவிடும் நபர்களுக்கு எதிராக எங்கள் குழு நடவடிக்கை எடுக்கும். இதனால் அனைவரும் எங்களுக்கு ஒத்துழைக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்” எனக் தயாரிப்பு நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.