இந்தியா-இங்கிலாந்து இளையோர் (19 வயதுக்கு உட்பட்டோர்) அணிகளுக்கான 3-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி மும்பையில் நேற்று நடந்தது. முதலில் ஆடிய இங்கிலாந்து அணி, இந்திய வீரர்களின் சிறப்பான பந்து வீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் 49 ஓவர்களில் 215 ரன்னில் ஆல்-அவுட் ஆனது. அதிகபட்சமாக ராவ்லின்ஸ் 96 ரன்னும், பார்ட்லெட் 55 ரன்னும் எடுத்தனர்.
இந்திய அணி தரப்பில் ராகுல் சாஹர் 4 விக்கெட்டும், அன்குல்ராய் 3 விக்கெட்டும் வீழ்த்தினார்கள். இதனை அடுத்து ஆடிய இந்திய அணி 44.1 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 216 ரன்கள் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. சுப்மான் கில் 138 ரன்னும், ஹர்விக் தேசாய் 37 ரன்னும் எடுத்து ஆட்டம் இழக்காமல் இருந்தனர்.
இந்த வெற்றியின் மூலம் 5 ஆட்டங்கள் கொண்ட போட்டி தொடரில் இந்திய அணி 2-1 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது. முதல் ஆட்டத்தில் இங்கிலாந்து அணியும், 2-வது ஆட்டத்தில் இந்திய அணியும் வென்று இருந்தன. இந்தியா-இங்கிலாந்து இளையோர் அணிகள் இடையிலான 4-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி மும்பையில் நாளை மறுநாள் (திங்கட்கிழமை) நடக்கிறது.