தற்போதைய நிர்வாகம் அண்டை நாடுகளிடம் உதவி கோரும் யுகத்தை உருவாக்கியுள்ளதாக எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் ஜே.சி.அலவத்துவல தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த நாடாளுமன்ற உறுப்பினர் ஜே.சி.அலவத்துவல, தற்போதைய நிர்வாகம் கண்காட்சி அரசாங்கமாக மாறியுள்ளதாக குறிப்பிட்டுள்ளார். இதன்போது மேலும் கருத்துரைத்த அவர்,
“உணவு மற்றும் எரிபொருள் உள்ளிட்ட அன்றாடத் தேவைகளை பூர்த்தி செய்வதில் மக்கள் சிக்கல்களை எதிர்நோக்கியுள்ள வேளையில், சுதந்திர தினக் கொண்டாட்டங்களுக்காகச் செய்யப்பட்ட செலவுகள் வீணானவை.
முப்படையினரின் பங்களிப்புடன் பெரும் செலவில் 74 ஆவது சுதந்திர தினம் கொண்டாடப்பட்டது.
குடிமக்கள் பட்டினி கிடக்கும் போது வடகொரியாவில் இராணுவ அணிவகுப்பு நடத்துவதைப் போன்றே அரசாங்கம் செயல்பட்டது.
சுதந்திர தினம் கோலாகலமாக கொண்டாடப்பட்ட போதிலும் இலங்கைக்கு முறையான சுதந்திரம் இல்லை.
வரலாற்றில் முதல் தடவையாக இந்தியாவிடம் எரிபொருளையும், பாகிஸ்தான் மற்றும் சீனாவிடம் அரிசியையும் பிச்சை எடுக்கும் நிலைக்கு அரசாங்கம் சென்றுள்ளதாக” அவர் கூறியுள்ளார்.