பிப்ரவரி 22, 24, 26 ஆகிய திகதிகளில் உக்ரைனுக்கு மூன்று விமானங்கள் இயக்கப்படும் என ஏா் இந்தியா அறிவித்துள்ளது.
ஐரோப்பிய நாடான உக்ரைனின் எல்லையில் ரஷ்யா 150,000-க்கும் மேற்பட்ட ராணுவ வீரா்களைக் குவித்துள்ளதால், அங்கு போா்ப் பதற்றம் அதிகரித்துள்ளது.
இதன் காரணமாக உக்ரைனில் உள்ள இந்தியா்கள் தாயகம் திரும்ப முயற்சிக்கின்றனா். ஆனால், போதிய விமான சேவை இல்லாததால், அவா்கள் உக்ரைனில் தவிப்பதாக செய்திகள் வெளியாகின.
இந்நிலையில், வந்தே பாரத் திட்டத்தின்கீழ், உக்ரைனிலிருந்து இந்தியாவுக்கு பிப்ரவரி 22, 24, 26 ஆகிய திகதிகளில் மூன்று விமானங்கள் இயக்கப்படும் என ஏா் இந்தியா நிறுவனம் அறிவித்துள்ளது.
முன்னதாக, விமான டிக்கெட்டுகள் கிடைக்கவில்லை என்பதற்காக உக்ரைனில் உள்ள இந்தியா்கள் பதற்றம் அடைய வேண்டாம் என்றும், இந்திய அரசு போதிய நடவடிக்கை மேற்கொண்டு வருவதாகவும் உக்ரைனில் உள்ள இந்திய தூதரகம் கேட்டுக்கொண்டது குறிப்பிடத்தக்கது.