கே.ஆர்.ஜி ஆபீசில் ஆபீஸ் பையனாக சேர்ந்து இயக்குனர் கே.எஸ்.ரவிகுமாரிடம் உதவியாளராகச் சேர்ந்து மிகவும் போராடி ஒரு படம் இயக்கும் வாய்ப்பைப் பெற்றார், இயக்குனர் சேரன்.
மெல்லிய உடம்பு, சுறுசுறுப்பு, அபார அறிவாற்றல். பாரதிகண்ணம்மா என்கிற படத்தை முதன் முதலில் இயக்கினார் சேரன். ஹீரோ பார்த்திபன்.
கிளைமாக்ஸில் சேரனுக்கும், பார்த்திபனுக்கும் கருத்து வேறுபாடு தோன்றி பெரிய சிக்கலை ஏற்படுத்தியது.
சேரன் சொன்ன கிளைமாக்ஸை பார்த்திபன் ஏற்றுக்கொள்ளவில்லை. ஆனால், சேரனோ தான் வைத்திருக்கும் கிளைமாக்ஸ் தான் படத்தின் உயிர். அதை மாற்ற மாட்டேன் என்று தில்லோடு போராடினார்.
குருநாதரிடம் போனார். அப்போது கே.எஸ்.ரவிகுமார் பிஸ்தா என்கிற படத்தை இயக்கி கொண்டிருந்தார். அவரிடம் சென்ற சேரன் எனக்கு பார்த்திபனால் பிரச்சனை. வந்து சரி செய்யுங்கள். இல்லையேல் செத்து விடுவேன் என்று அழுதார்.
குருநாதர் களம் இறங்கினார். பார்த்திபனிடம் பேசி போராடி சேரனின் கிளைமாக்சில் நடிக்க வைத்தார். படம் ரிலீஸ் ஆனது. வெள்ளிவிழா கொண்டாடிய படம் . வடிவேலு, பார்த்திபனின் முதல் கூட்டணி.
அதன் பின் சேரன் தரும் படம் எல்லாம் மக்களை கொள்ளை கொண்டது. பொற்காலம் மறக்க முடியாத படம். இந்த நேரத்தில் இயக்குனர் தங்கர்பச்சான் சொல்ல மறந்த கதை மூலம் சேரனை ஹீரோ ஆக்கினார். அதிலும் வெற்றி.
அதன் பின்னும் தானே நடித்து படங்களை இயக்கினார் சேரன். எல்லாம் காதல் படங்கள். மெல்லிய உணர்வுகளை சொல்லும் அழகான காவியங்கள்.
இந்த நேரத்தில் தான் தனது இளைய மகள் ஒரு பையனைக் காதலித்தார். பெரும் பூகம்பம் வெடித்தது. பிரச்னை தமிழ் நாட்டுக்கே தெரியும் அளவிற்கு விஸ்வரூபம் எடுத்தது.
காதலனை சேரனுக்கு பிடிக்கவில்லை. இறுதியில் திரையுலகமே சேர்ந்து போராடி சேரன் மகளை மீட்டு கொடுத்தது. அவ்வளவு தான்.
அதன் பின் சேரன் படங்களை இயக்கவும் இல்லை. நடிக்கவும் இல்லை. என்ன படம் எடுப்பது…?
காதலை சொல்ல முடியுமா இனி..? சொன்னால் மக்கள் சிரிக்க மாட்டார்களா? காதல் இல்லை என்றால் வேறு எந்த கருத்துடன் படம் செய்வது..?
எந்தக் கருத்தாக இருந்தாலும் உள்ளே ஒரு காதல் இருந்தாகவேண்டுமே..? குழப்பம் குழப்பம்..குழப்பம்..அமைதியாக ஆபீஸ் வருவது, போவது என்று ஆகிவிட்டார் சேரன்.
காதலில் பெயர் வாங்கிய ஒரு இயக்குனர், தனது வீட்டில் ஒரு காதலை ஏற்றுக் கொள்ள முடியாமல் சோர்ந்து போனது விதியா…?