கனடாவில் போராட்டம் ஒன்றுக்காக அவசரநிலை பிரகடனம் செய்யப்பட்டது இது முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.
கொரோனா தொற்று பரவாமல் தடுக்க கனடாவில் அரசு கொரோனா கட்டுப்பாடுகளை கடுமையாக்கியது. பொது இடங்களில் நடமாடுவோர், பொது போக்குவரத்தில் பயணிப்போருக்கு தடுப்பூசி சான்றிதழ் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவில் இருந்து வருவோருக்கு கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. லாரி டிரைவர்களுக்கு தடுப்பூசி கட்டாயம். தடுப்பூசி போடாதவர்கள் ஒரு வாரம் தனிமைப்படுத்தப்படுவார்கள் என அரசு உத்தரவிட்டது. இதை எதிர்த்து லாரி டிரைவர்கள் ஒட்டாவாவில் உள்ள முக்கிய சாலைகளில் லாரிகளை நிறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.
இதற்கிடையே, போராட்டத்தை ஒடுக்கும் விதமாக கடந்த 15ம் தேதி நாடுமுழுவதும் அவசரநிலை சட்டத்தை பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ அறிவித்தார். போராட்டக்காரர்களின் லாரிகள், அவர்கள் அமைத்திருந்த தற்காலிக கூடாரங்களை போலீசார் அப்புறப்படுத்தியதால் அங்கு ஏற்பட்டிருந்த அமைதியற்ற சூழல் முடிவுக்கு வந்தது.
இந்நிலையில், லாரி டிரைவர்கள் போராட்டம் முடிவுக்கு வந்ததை தொடர்ந்து, கனடாவில் அவசரநிலை பிரகடனம் ரத்து செய்யப்படுகிறது என அந்நாட்டு பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ அறிவித்துள்ளார்.