சர்ச்சைக்குரிய மிக் விமான கொடுக்கல் வாங்கல் தொடர்பான விசாரணைகளில் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ கைது செய்யப்படுவதற்கான வாய்ப்புகள் காணப்படுவதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஆட்சிக்காலத்தில் இடம்பெற்றதாகக் கூறப்படும் மிக் விமான கொடுக்கல் வாங்கல் தொடர்பான நிதிக் குற்றப் புலனாய்வு பிரிவின் விசாரணைகள் தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையிலேயே இவர் கைது செய்யப்படலாம் என எதிர்ப்பார்க்கப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.
அதேவேளை, கோட்டாபயவை கைது செய்வதற்கு அரசியல் அதிகாரத் தரப்பிடமிருந்து ஒப்புதல் கிடைக்கும்வரை நிதிக் குற்றப் புலனாய்வு பிரிவினர் காத்திருப்பதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
நாட்டின் பாதுகாப்பு உபகரணங்கள் தொடர்பான தலைமைப் பொறுப்பாளராக கோட்டாபய விளங்கிய கடந்த 2006ஆம் ஆண்டு காலப்பகுதியில் 2 ஆயிரத்து 462 மில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான நான்கு மிக்-27 ரக தாக்குதல் விமானங்கள் கொள்வனவு செய்யப்பட்டிருந்தன.
இந்த கொள்வனவின்போது பின்பற்றப்பட்ட நடைமுறைகள் சந்தேகத்திற்கிடமானது என நிதிக்குற்றப் பிரிவுக்கு முறைப்பாடு கிடைத்ததற்கு அமைய இதன் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டு இருந்தமை குறிப்பிடத்தக்கது.