ஒமைக்ரான் வைரஸ் மாறுபாடுகள் பற்றி டென்மார்க்கில் உள்ள ஸ்டேடன்ஸ் சீரம் இன்ஸ்டிடியூட்டின் ஆராய்ச்சியாளர்கள் ஆய்வு நடத்தி உள்ளனர்.
கொரோனா வைரஸ் சீனாவின் உகான் நகரில் 2019 டிசம்பர் மாதம் முதன் முதலாக வெளிப்பட்டது. தொடர்ந்து அது ஆல்பா, பீட்டா, காமா, டெல்டா என உருமாற்றங்களை அடைந்து வருகிறது.
அந்த வரிசையில் தென் ஆப்பிரிக்காவில் கடந்த ஆண்டு நவம்பர் 24-ந் தேதி உருமாறிய கொரோனாவான ஒமைக்ரான் வைரஸ் (பிஏ.1) கண்டறியப்பட்டு இன்றைக்கு அதுவும் உலகமெங்கும் பரவி உள்ளது. இந்த வைரசை கவலைக்குரிய மாறுபாடாக உலக சுகாதார அமைப்பு வகைப்படுத்தியது.
இந்த நிலையில் ஒமைக்ரானின் புதிய வடிவம், இங்கிலாந்து நாட்டில் முதலில் வெளிப்பட்டு, அதற்கு பிஏ.2 என்று பெயரிடப்பட்டுள்ளது. இது விசாரணையின் கீழ் உள்ள மாறுபாடு என்று வகைப்படுத்தப்பட்டுள்ளது.
இந்த ஒமைக்ரான் வைரஸ் மாறுபாடுகள் பற்றி டென்மார்க்கில் உள்ள ஸ்டேடன்ஸ் சீரம் இன்ஸ்டிடியூட்டின் ஆராய்ச்சியாளர்கள் ஆய்வு நடத்தி உள்ளனர். இதில் தெரிய வந்துள்ள முக்கிய தகவல்கள் வருமாறு:-
- ஒமைக்ரான் வைரசின் வகைகளான பிஏ.1 மற்றும் பிஏ.2 ஆகியவற்றின் எழுச்சியுடன், முந்தைய நிகழ்வுகளில் (தொற்று பாதிப்புகள்) இருந்து அதிக எண்ணிக்கையிலான மறுதொற்றுகள் காணப்படுகின்றன.
- இது பல்வேறு கேள்விகளை எழுப்புகின்றன. பிஏ.1 தொற்று பாதிப்புக்கு பின்னர் ஏற்படுகிற இயற்கையான நோய் எதிர்ப்பு சக்தியில் இருந்து பிஏ.2 தப்ப முடியுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
- பிஏ.1 தொற்று பாதிப்புக்கு பின்னர் 187 பேருக்கு பிஏ.2 தொற்று கண்டறியப்பட்டுள்ளது. 18 லட்சம் தொற்றுகளை ஆராய்ந்ததில் இது தெரியவந்துள்ளது.
- 67 பேருக்கு 20 முதல் 60 நாள் வரையிலான இடைவெளியில் மறுதொற்று ஏற்பட்டுள்ளது.
- பாதிப்புக்குள்ளானோரில் பெரும்பாலோர் இளைஞர்கள், தடுப்பூசி போட்டுக்கொள்ளாதவர்கள், லேசான தொற்று பாதிப்பை இவர்கள் சந்தித்துள்ளனர்.
- பாதிக்கப்பட்டவர்கள் ஆஸ்பத்திரிகளில் சேர்க்கப்படவில்லை. அதற்கான தேவை எழவில்லை.
- ஆய்வின் முடிவு, ஒமைக்ரான் வைரசின் 2 வெவ்வேறு வடிவம் ஒருவரை தாக்குவது சாத்தியம்தான்.
இவ்வாறு ஆய்வில் தெரிய வந்துள்ளது.