வேறு ஒரு நபருடன் உறவு வைத்துக் கொண்ட இந்தோனேசியப் பெண்ணுக்கு 26 கசையடிகள் தண்டனையாக வழங்கப்பட்டுள்ளது.
இந்தோனேசியா இஸ்லாமிய பெரும்பான்மை கொண்ட நாடு. ஷரியா எனப்படும் இஸ்லாமிய சட்டம் இங்கு தீவிரமாக பின்பற்றப்படுவது வழக்கம். அதிலும், அந்நாட்டின் பன்டா ஏஸ் மாகாணத்தில் அச்சட்டம் கடுமையாக பின்பற்றப்படும்.
விபசாரம், கள்ளத்தொடர்பு, மது அருந்துதல், சூதாட்டம் போன்றவற்றில் ஈடுபடுவோருக்கு, ஷரியா சட்டப்படி, கடுமையான தண்டனைகளும் வழங்கப்படும்.
இந்நிலையில், திருமணமான பெண் ஒருவர், வேறு ஒரு நபருடன் உறவு வைத்துக் கொண்ட காரணத்திற்காக அங்குள்ள மசூதி ஒன்றின் முன்பு அப்பெண்ணிற்கு சுமார் 26 கசையடிகள் வழங்கப்பட்டது.
அப்பெண்ணை அழைத்து வந்த பொலிசார், மசூதி முன்பு முழங்காலிட்டு உட்கார வைத்தனர். இதனை பார்க்க அங்கு பெருந்திரளான மக்கள் கூட்டம் கூடியது. அப்போது அங்கு வந்த கருப்பு நிற நீண்ட அங்கி அணிந்த நபர் ஒருவர் அப்பெண்ணுக்கு கசையடி வழங்கி தண்டனையை நிறைவேற்றினார்.
அதனையடுத்து, அவருடன் உறவு வைத்திருந்த நபருக்கும் கசையடி தண்டனை வழங்கப்பட்டது.
திருமணம் என்ற பெயரில் கட்டாய பாலியல் வன்கொடுமை நடைபெற்று வரும் நிலையில், அதனை ஒரு பொருட்டாகக் கூட எண்ணாமல் பல நாடுகள் இருக்கும் சூழலில், வேறு ஒருவருடன், தனது விருப்பத்துடன் உறவு வைத்திருக்கும் பெண்ணுக்கு இது போன்ற கொடூர தண்டனைகள் பொதுவெளியில் வழங்கும் நாடுகளும் இருக்கத் தான் செய்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.