உலக கோப்பை கால்பந்து தகுதி சுற்றில் ரஷியாவுக்கு எதிரான ஆட்டத்தில் விளையாடமாட்டோம் என போலந்து கால்பந்து சம்மேளனம் அறிவித்துள்ளது.
32 அணிகள் பங்கேற்கும் 22-வது உலக கோப்பை கால்பந்து திருவிழா கத்தாரில் வருகிற நவம்பர் மற்றும் டிசம்பர் மாதம் நடக்கிறது. இந்த போட்டிக்கு இதுவரை 15 நாடுகள் தகுதி பெற்றுள்ளன. மீதமுள்ள 17 இடங்களுக்கான தகுதி சுற்று போட்டிகள் பல்வேறு நாடுகளில் நடந்து வருகிறது. இதில் ஐரோப்பிய மண்டல அணிகளுக்கான தகுதி சுற்றின் ‘பிளே-ஆப்’ அரைஇறுதியில் போலந்து-ரஷியா அணிகள் மோதும் ஆட்டம் மாஸ்கோவில் மார்ச் 24-ந் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. இதில் வெற்றி பெறும் அணி அடுத்த ஆட்டத்தில் சுவீடன் அல்லது செக்குடியரசு அணியுடன் மோத வேண்டியது வரும். இதில் வெற்றி பெறும் அணி உலக கோப்பை போட்டிக்கு தகுதி பெறும். இந்த நிலையில் ரஷியாவுக்கு எதிரான உலக கோப்பை தகுதி சுற்று போட்டியில் விளையாட முடியாது என்று போலந்து கால்பந்து சம்மேளனம் அறிவித்துள்ளது.
இது குறித்து போலந்து கால்பந்து சம்மேளன தலைவர் சிஜாரி குலேசா தனது டுவிட்டர் பதிவில், ‘உக்ரைன் மீது போர் தொடுத்து இருக்கும் ரஷியாவுக்கு எதிரான உலக கோப்பை தகுதி சுற்று போட்டியில் எங்கள் அணி பங்கேற்காது. இனிமேல் சொல்வதற்கு ஒன்றுமில்லை. செயல்பட வேண்டிய நேரம் இது. இந்த விஷயத்தில் ஒருங்கிணைந்த நிலைப்பாட்டை சர்வதேச கால்பந்து சம்மேளனத்திடம் முன்வைக்க நாங்கள் மற்ற நாட்டு சம்மேளனங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம்’ என்று குறிப்பிட்டுள்ளார்.
போலந்து அணியின் முன்னணி வீரர் ராபர்ட் லெவாண்டவ்ஸ்கி கருத்து தெரிவிக்கையில், ‘இது சரியான முடிவாகும். ரஷியா ஆயுதங்களுடன் உக்ரைனுக்குள் ஊடுருவி தாக்குதலில் ஈடுபட்டுள்ள இந்த சூழலில் அந்த நாட்டின் தேசிய அணிக்கு எதிராக விளையாடுவதை கற்பனை செய்து கூட பார்க்க முடியாது’ என்றார்.