தமது உறவுகளையும், வாழ்வியல் பிரதேசங்களையும் பறிக்கொடுத்த நிலையில் எம் மக்கள் துயரில் வாடும் நிலையில், எங்களுக்கு என்ன சுதந்திரம் என வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
பூநகரி பிரதேச வைத்தியசாலையின் குடிநீர் சுத்திகரிப்பு செயற்திட்டம் இன்று (சனிக்கிழமை) ஆரம்பித்து வைக்கப்பட்டது. குறித்த நிகழ்வின் பின்னர் முதலமைச்சர் சுதந்திர நிகழ்வுகளில் கலந்துக் கொள்ளாமை குறித்து ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
குறித்த நிகழ்வில் உரையாற்றிய முதலமைச்சர், இரணைமடுக் குளத்தில் இருந்து நீரை பெற்றுக்கொள்ளும் ஒரு திட்டம் முன்பு தயாரிக்கப்பட்ட போதும் பல்வேறு காரணங்களால் அத்திட்டம் முழுமை பெறவில்லை.
வடமாகாணத்தைப் பொறுத்தவரையில் பூநகரிப் பிரதேசம் குடிநீர் தட்டுப்பாட்டைக் கொண்ட ஒரு பிரதேசமாக அடையாளங்காணப்பட்டிருந்தது. இப்பிரதேசத்திற்கான குடிநீரை இரணைமடுக் குளத்தில் இருந்து பெற்றுக்கொள்ளும் ஒரு திட்டம் முன்பு தயாரிக்கப்பட்ட போதும் பல்வேறு காரணங்களால் அத்திட்டம் முழுமை பெறவில்லை.
அதன் காரணமாக பூநகரிப் பிரதேசத்திற்கான குடிநீர் விநியோகம் தற்காலிகமாக தடைப்பட்டிருந்தது.
இந்நிலையில், பூநகரி பிரதேச வைத்தியசாலையின் குடிநீர் தட்டுப்பாட்டைப் போக்கும் வகையில், குறித்த நீர் சுத்திகரிப்பு செயற்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
அரசாங்கம் எமக்குத்தரும் நிதி மிகச் சொற்பமே. அதற்காக நாங்கள் தலையில் கைவைத்துக் கொண்டு தள்ளியிருக்கத் தயாரில்லை. எம்மால் முடியுமானவற்றை செய்து கொண்டு போகின்றோம்.
இன்றைய இந்த நல்ல நிகழ்வில் தண்ணீர் சுத்திகரிப்பு நிலையத்தினை எமக்கு வழங்கியுதவிய ஸ்ரீ சத்திய சாயி மத்திய நிலையத் தலைவர் மற்றும் தொடர்புடைய அனைவருக்கும் எமது மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்ளுகின்றேன் என்றார்.