மறைந்த ஸ்ரீ பரமஹம்ச யோகானந்தரின் ஆன்மிக சொற்பொழிவுகள் மற்றும் கட்டுரைகளுடன் வெளிவந்த ‘தி டிவைன் ரொமான்ஸ்’ என்ற ஆங்கில புத்தகம் தமிழில் ‘தெய்வீகக் காதல்’ என்ற பெயரில் மொழிபெயர்க்கப்பட்டு உள்ளது.
இந்த புத்தகத்தின் வெளியீட்டு விழா ‘யோகதா சத்சங் சொசைட்டி ஆப் இந்தியா’ என்ற ஆன்மிக தொண்டு நிறுவனத்தின் சார்பில் சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள ராகவேந்திரா திருமண மண்டபத்தில் நேற்று நடந்தது.
விழாவில் நடிகர் ரஜினிகாந்த் கலந்துகொண்டு ‘தெய்வீகக் காதல்’ நூலை வெளியிட்டார். அப்போது அவர் பேசியதாவது:-
“சிறு வயதிலேயே எனக்கு ஆன்மிக ஈடுபாடு இருந்தது. எனது அண்ணன் சத்யநாராயணன் ஆன்மிக கூட்டங்களுக்கு என்னை அழைத்து செல்வார். அப்போது ‘மனித ஜென்மம் பெரியது. அதை பாழாக்காதீர்கள் பைத்தியக்காரர்களே…’, என்ற பக்தி பாடலை கேட்டிருக்கிறேன். எத்தனையோ ஜென்மங்களை கடந்துதான் மனிதனாக பிறக்கிறோம். இந்த மனித வாழ்க்கையில் சம்சாரம், பணம், சுகம், புகழ், சந்தோஷம் போன்றவற்றில் மூழ்கி விடுகிறோம்.
இதில் நாம் யார்? எங்கிருந்து வந்தோம்? மரணத்துக்கு பிறகு என்ன? கடவுள் யார்? ஆத்மா என்றால் என்ன? என்ற கேள்விகள் வருவது அபூர்வம். ஒரு குரு கிடைப்பது அபூர்வம். அந்த குருவிடம் இருந்து போதனைகள் கிடைப்பதும் அபூர்வம்.
நான் ஒரு ஆன்மிகவாதி என்பதில் பெருமைப்படுகிறேன். இந்த வாழ்க்கை ஆண்டவன் கொடுத்த பிராப்தம். போன ஜென்மத்தில் நான் செய்த புண்ணியங்கள் தான் என்னை ஆன்மிகத்தில் ஈடுபட வைத்தது. நான் பெரிய நடிகன் என்பதை விட ஆன்மிகவாதி என்று சொல்லிக்கொள்வதில் தான் பெருமை அடைகிறேன்.
நான் சம்பாதித்த பணம், புகழ், பெயர் எல்லாவற்றையும் ஒரு பக்கத்திலும், ஆன்மிகத்தை இன்னொரு பக்கத்திலும் வைத்துக்கொண்டு உனக்கு எது வேண்டும்? என்று கேட்டால், ‘ஆன்மிகம் தான் வேண்டும்’, என்பேன். அந்த அளவுக்கு அதில் ஒரு ‘பவர்’ இருக்கிறது.
ஒரு ராஜா தன்னிடம் இருந்த மந்திரிக்கு தேவையான வசதிகளை எல்லாம் செய்துகொடுத்து சந்தோஷமாக வைத்திருந்தான். அந்த மந்திரி ஒருநாள், ‘நிம்மதி தேடி இமயமலைக்கு செல்கிறேன்’, என்று ராஜாவிடம் சொல்லிவிட்டு போனான். சில வருடங்களுக்கு பிறகு மந்திரி சன்னியாசியாக அதே நாட்டுக்கு திரும்பி வந்து, ஒரு சிறிய குடிசையில் பாய், தட்டு சகிதங்களுடன் தங்கியிருந்தான்.
ராஜா நேரில் சென்று மந்திரியை பார்த்து, ‘நான் அளித்த வசதிகளை எல்லாம் விட்டுவிட்டு இப்படி கஷ்டப்படுகிறாயே?’, என்று கேட்டார். அதற்கு மந்திரி, ‘முன்பு நான் நின்று கொண்டிருந்தேன், நீங்கள் உட்கார்ந்திருந்தீர்கள். இப்போது நான் உட்கார்ந்திருக்கிறேன், நீங்கள் நிற்கிறீர்கள்’, என்றார். இது தான் ஆன்மிகத்தின் ‘பவர்’.
‘ரஜினிகாந்த் ஒவ்வொரு மத குருக்களின் பெயரை சொல்லி குழப்புகிறாரே…’, என்று மக்களும், ரசிகர்களும் நினைத்தது உண்டு. எனது முதல் குரு என் அண்ணன் சத்யநாராயணன். அவர் எனக்கு ஆன்மிக சிந்தனைகளை ஊட்டினார்.
ராமகிருஷ்ண பரமஹம்சரிடம் இருந்து ஒழுக்கத்தை கற்றேன். ராகவேந்திரரிடம் இருந்து பக்தியை கற்றேன். ரமண மகரிஷியிடம் இருந்து ‘நான் யார்?’, என்பதை எனக்குள்ளேயே தேட கற்றுக்கொண்டேன். தயானந்த சரஸ்வதியிடம் இருந்து சமூக பிரச்சினைகள், வேத நுணுக்கங்களை அறிந்தேன். சச்சிதானந்த சுவாமிகளும் எனக்கு குரு.
ஆன்மிக தேடல் எனக்கு தொடர்ந்து இருந்தது. 1978-ம் ஆண்டு நான் நடிகனானதும் விமான நிலையத்தில் பாபாஜியின் புத்தகத்தை பார்த்தேன். அப்போது அவர் ஆணா? பெண்ணா? என்ற சந்தேகம் இருந்தது. ஆனாலும் அவர் பார்வை என்னை ஈர்த்தன. அந்த புத்தகத்தை வாங்கி படிக்காமலேயே வைத்திருந்தேன்.
20 வருடங்களுக்கு பிறகு ‘படையப்பா’ படத்தை முடித்ததும், ‘இனிமேல் சினிமாவில் நடிக்க வேண்டாம்’, என்று முடிவு செய்தேன். அப்போது சச்சிதானந்தர் அமெரிக்காவுக்கு என்னை அழைத்தார். பாபா புத்தகத்தையும் உடன் எடுத்துச்சென்றேன். ‘சினிமா சக்தி வாய்ந்தது. ஆயிரம் சுவாமிகள் சொல்லாத விஷயங்கள் சினிமா மூலம் மக்களை எளிதாக சென்று சேரும். ஆன்மிக விஷயங்களையும் சினிமாவில் சொல்லலாம்’, என்று அறிவுறுத்தினார்.
அப்போது பாபாஜியின் புத்தகத்தை படிக்க ஆரம்பித்தேன். கீழே வைக்க முடியவில்லை. அதில் இருந்து ஒரு ஒளி வருவது போல தெரிந்தது. என் உடம்பு என்னவோ மாதிரி ஆனது. வியர்க்கவும் செய்தது. அந்த அனுபவம் வித்தியாசமாக இருந்தது. உடனடியாக என் மனதில் ‘பாபா’ படத்தின் கதை தயாரானது. அந்த கதையை நானே எழுதி, தயாரித்து படமாக்கினேன். வியாபார ரீதியில் அது நன்றாக போகாமல் நஷ்டம் ஏற்பட்டது. நஷ்டம் அடைந்தவர்களுக்கு பணத்தை திருப்பி கொடுத்தேன்.
அந்த படம் வியாபார நோக்கில் எடுக்கப்பட்டது அல்ல. அதன் பிறகு ‘கிரியா யோகா’ கற்றேன். அது என் வாழ்க்கையையே மாற்றியது. ‘கிரியா யோகா’ சாதாரணமானது அல்ல. நமக்கு எது நல்லது? எது கெட்டது? என்று தெரியும். தியானம் சக்தி கொடுக்கும் என்று எல்லோரும் சொல்கிறார்கள். ஆனாலும் அதை கேட்பது இல்லை.
இமயமலையில் ஏராளமான ஆன்மிக ரகசியங்கள் நிறைந்து கிடக்கிறது. பெரிய சித்தர்களும், யோகிகளும் இமயமலையில் பெற்ற அனுபவங்களை சாதாரண மக்களுக்கும் கொண்டு சேர்க்க நினைத்தார்கள். நமது உடலுக்குள் பல ‘மெக்கானிஷம்’ இருக்கிறது. முதுகெலும்பில் சக்கரங்கள் இருக்கின்றன.
மண், அக்னி, தண்ணீர், வாயு, சத்தம், ஆகாயம் போன்றவைகளில் உள்ள சக்திக்கும், உடம்புக்கும் தொடர்பு ஏற்படுத்த வேண்டும். கிரியா பயிற்சி மூலம் அதை செய்ய முடியும். எல்லோரும் கஷ்டப்பட்டு உழைப்பது சந்தோஷமாக வாழத்தான். ஆனால் அந்த சந்தோஷம் கிடைக்கிறதா? விதை போடுவதற்கு முன் பூமியை பதப்படுத்த வேண்டும். அப்போது தான் பலன் கிடைக்கும்.
அதுபோல் கிரியா மூலம் உடம்பை சுத்தம் ஆக்கினால், கடவுள் விருந்தாளியாக நெஞ்சுக்குள் வருவார்.
ஆன்மிகவாதிகள் சொல்லும் விஷயங்களை ஏற்றுக்கொண்டு அதன்படி நடந்தால் கடவுளுக்கு நெருக்கம் ஆகலாம். ஒவ்வொருவரும் ஆத்மாவை உணர்ந்து பரமாத்மாவுடன் இணைய வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
விழாவில், யோகதா சத்சங்க அமைப்பின் பொதுச்செயலாளர் சுவாமி ஸ்மரணானந்த கிரி, பொருளாளர் சுவாமி சுத்தானந்த கிரி ஆகியோர் கலந்துகொண்டனர்.