டெஸ்ட், ஒரு நாள் கிரிக்கெட் போட்டி முறையில் மாற்றம் செய்ய ஐ.சி.சி. திட்டமிட்டுள்ளது.
சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் (ஐ.சி.சி.) தலைமை செயற்குழு கூட்டம் துபாயில் இரண்டு நாட்கள் நடந்தது. இதில் கிரிக்கெட்டில் மேலும் விறுவிறுப்பு கொண்டு வரும் வகையில் சர்வதேச டெஸ்ட் மற்றும் ஒரு நாள் கிரிக்கெட் தொடர்களின் போட்டி அட்டவணை முறையில் மாற்றம் செய்வது குறித்து தீவிரமாக ஆலோசிக்கப்பட்டது.
லீக் முறையில் போட்டிகளை நடத்த உத்தேசிக்கப்பட்டிருக்கிறது. 2019-ம் ஆண்டில் இருந்து சர்வதேச கிரிக்கெட்டில் பல்வேறு அதிரடி மாற்றங்கள் கொண்டு வரப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது தொடர்பான ஐ.சி.சி.யின் முக்கியமான பரிந்துரைகள் வருமாறு:-
2019-ம் ஆண்டில் இருந்து அடுத்த 3 ஆண்டுகளுக்கு 13 அணிகள் இடையே லீக் முறையில் ஒரு நாள் போட்டிகள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதில் இந்தியா, ஆஸ்திரேலியா, பாகிஸ்தான், தென்ஆப்பிரிக்கா உள்பட முழு உறுப்பினர் அந்தஸ்து பெற்ற 10 அணிகளுடன், ஆப்கானிஸ்தான், அயர்லாந்து மற்றும் உலக கிரிக்கெட் லீக்கில் வெற்றி பெறும் அணி இடம் பெற்றிருக்கும். ஒவ்வொரு அணியும் உள்ளூர்-வெளியூர் அடிப்படையில் மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை ஒரு நாள் தொடரில் ஆட வேண்டும். உதாரணமாக இந்திய அணி ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடினால், அதன் பிறகு ஆஸ்திரேலிய அணி குறிப்பிட்ட காலத்திற்குள் இந்தியாவுக்கு வந்து விளையாட வேண்டும். இரு நாடு தொடரில் எத்தனை ஆட்டங்கள் வேண்டும் என்றாலும் இருக்கலாம். ஆனால், ஒரு ஆண்டில் குறைந்தது 12 ஒரு நாள் போட்டிகளில் விளையாடி இருக்க வேண்டும். ஒவ்வொரு தொடரின் முடிவிலும் புள்ளிகள் வழங்கப்படும்.
3 ஆண்டுகளுக்கு பிறகு புள்ளி பட்டியலில் டாப்-7 இடம் வகிக்கும் அணிகள் நேரடியாக 50 ஓவர் உலக கோப்பை போட்டிக்கு தகுதி பெறும். போட்டியை நடத்தும் நாடு புள்ளி பட்டியலில் எந்த நிலையில் இருந்தாலும் தானாகவே தகுதி பெற்று விடும். எஞ்சிய 5 அணிகள் தகுதி சுற்று போட்டிகளில் விளையாடும். அதில் இருந்து இரு அணிகள் உலக கோப்பைக்கு தகுதி பெறும்.
சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டை பொறுத்தவரை அயர்லாந்து, ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு டெஸ்ட் அந்தஸ்து வழங்கப்படும் என்று தெரிகிறது. இதன்படி இந்தியா, ஆஸ்திரேலியா, பாகிஸ்தான், தென்ஆப்பிரிக்கா, இங்கிலாந்து, இலங்கை, நியூசிலாந்து, வெஸ்ட் இண்டீஸ், வங்காளதேசம் ஆகிய சவால்மிக்க 9 அணிகள் ஒரு பிரிவாகவும், ஜிம்பாப்வே, அயர்லாந்து, ஆப்கானிஸ்தான் ஆகிய 3 அணிகள் மற்றொரு பிரிவாகவும் பிரிக்கப்படும்.
இதன்படி 9 பிரதான அணிகளும் இரண்டு ஆண்டு இடைவெளிக்குள் தங்களுக்குள் தலா ஒரு முறை டெஸ்ட் தொடரில் மோதியிருக்க வேண்டும். அடுத்த 2 ஆண்டுகளிலும் இதே போன்ற நடைமுறை பின்பற்றப்படும். மொத்தத்தில் ஒரு நாள் லீக் போன்றே உள்ளூர், வெளியூர் அடிப்படையில் டெஸ்ட் தொடரில் விளையாடி இருக்க வேண்டும். ஆனால் ஒவ்வொரு தொடரிலும் எந்த மாதிரி புள்ளிகள் பிரித்து வழங்கப்படும் என்பது தெளிவுப்படுத்தப்படவில்லை.
ஒரு அணி ஏதாவது ஒரு நாட்டிற்கு செல்ல மறுத்தால், அந்த அணி குறிப்பிட்ட புள்ளிகளை இழக்க நேரிடும். உதாரணமாக, முதல் 2 ஆண்டுக்குள் நியூசிலாந்து அணி இலங்கை சென்று விளையாடிய பிறகு, அடுத்த 2 ஆண்டுகளுக்குள் ஏதாவது ஒரு காரணத்தால் இலங்கை அணி நியூசிலாந்துக்கு செல்ல மறுத்தால் புள்ளிகள் இழப்பு நடவடிக்கைக்கு உள்ளாகும். இதே முறை இந்தியா-பாகிஸ்தான் தொடருக்கும் பொருந்தும்.
பிரதான அணிகள், கடைசி 3 இடத்தில் உள்ள குட்டி அணிகளில் ஏதாவது ஒரு அணியுடன் ஒவ்வொரு இரண்டு ஆண்டு இடைவெளியில் கட்டாயம் விளையாடியாக வேண்டும்.
நான்கு ஆண்டு நிறைவில் கடைசி 3 இடத்தை பிடிக்கும் அணிகளின் செயல்பாடு எப்படி இருக்கிறது என்று ஆராயப்பட்டு, அவர்களுக்கு டெஸ்ட் அந்தஸ்து தொடர்ந்து வழங்குவதா? வேண்டாமா? என்பது குறித்து முடிவு எடுக்கப்படும். இவ்வாறு செய்யும் போது போட்டியில் சுவாரஸ்யம் அதிகரிக்கும், வருவாய் உயரும், போட்டியை காண வரும் ரசிகர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என்பது ஐ.சி.சி.யின் எண்ணமாகும்.
20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டிக்கு தகுதி சுற்று 5 மண்டலங்கள் வாரியாக நடத்த சிபாரிசு செய்யப்பட்டு இருக்கிறது. அதாவது 20 ஓவர் நேரடி தொடரில் (அதிகபட்சம் 3 ஆட்டங்களுக்கு மேல் இருக்கக்கூடாது) விளையாடி அதில் கிடைக்கும் புள்ளிகளின் அடிப்படையில் அணிகள் மண்டல போட்டிக்குள் நுழையும். மண்டல போட்டி முடிவில் 20 ஓவர் உலக கோப்பை போட்டிக்கு தகுதி பெறும்அணி தேர்வாகும். ஆனால் இதற்குரிய காலக்கட்டம் எத்தனை ஆண்டுகள் என்பது இறுதி செய்யப்படவில்லை.
இது போன்ற அதிரடி மாற்றங்களுக்கு அனுமதி அளிப்பது குறித்து ஏப்ரல் மாதம் நடக்கும் ஐ.சி.சி. கூட்டத்தில் முடிவு செய்யப்படும். அனுமதி கிடைத்து விட்டால் சர்வதேச கிரிக்கெட் அரங்கில் மிகப்பெரிய மாற்றங்களை பார்க்கலாம். ஆனால் இதன் மூலம் டெலிவிஷன் சேனல்களுக்கு ஒளிபரப்பு உரிமம் வழங்குவதில் நிறைய சிக்கல் உருவாகும்.