ஆஸ்திரேலிய அரசால் சுமார் 9 ஆண்டுகளாக சிறைவைக்கப்பட்டிருந்த ஈரானிய அகதியான மெஹ்தி அலி, சமீபத்தில் விடுவிக்கப்பட்டு அமெரிக்காவில் நிரந்தரமாக மீள்குடியமர்த்தப்படுவதற்காக அமெரிக்காவுக்கு பயணமாகி இருக்கிறார்.
ஈரான் நாட்டைச் சேர்ந்த மெஹ்டி அலியும், அவரது உடன்பிறவா சகோதரர் அட்னானும் தமது 15வது வயதில் இந்தோனேசியா வழியாக ஆஸ்திரேலியாவின் கிறிஸ்துமஸ் தீவில் தஞ்சம் அடைந்தவர்கள். ஆஸ்திரேலியாவில் படகு வழியாக தஞ்சமடைந்த மெஹ்தி அலி, தனது ஆஸ்திரேலிய தடுப்பு அனுபவத்தின் வலியை தி கார்டியன் ஊடகத்தில் பகிர்ந்திருக்கிறார்.
அதில், “நவுருத்தீவில் உள்ள முகாமில், முதல் ஆண்டில் சிறைவைக்கப்பட்ட போது பெரும்பாலான தஞ்சக்கோரிக்கையாளர்கள் மன அழுத்தத்துடன் இருந்ததை கண்டேன். தனக்குத் தானே தீ வைத்துக் கொண்டு இறந்த அகதியை கண்டதே எனது வாழ்க்கையின் மோசமான நிகழ்வாகும். அந்த நவுருத்தீவு முகாமில் நானும் எனது உடன்பிறவா சகோதரனான அட்னானும் 6 ஆண்டுகள் இருந்தோம்,” என்கிறார்.
“6 ஆண்டுகளுக்குப் பின்னர் பயணமாவதற்கு(ஆஸ்திரேலியாவுக்கு அழைத்துச் செல்ல) தயாராகும் படி அதிகாரிகள் சொல்லினர். நமது இருண்ட காலம் முடிந்து விட்டது. நாம் சுதந்திரத்தை கொண்டாட தயாராக வேண்டும் என அட்னானிடம் சொல்லினேன். ஆனால், ஆஸ்திரேலியாவின் பிரிஸ்பேன் நகரில் உள்ள விமான நிலையத்தில் இறங்கிய சில நிமிடங்களில் எங்களது நம்பிக்கைகள் தகர்ந்து போயின. நாங்கள் விமான நிலையத்திற்கு அருகாமையில் இருந்த தடுப்பு முகாமிற்கு மாற்றப்பட்டோம். பின்னர், கங்காரு பாய்ண்ட் எனும் ஹோட்டல் தடுப்புக்கு மாற்றப்பட்டோம்,” என்கிறார் அலி.
கிறிஸ்துமஸ் தீவிலிருந்து பல தடுப்பு முகாம்களுக்கு மாற்றப்பட்ட இவர்கள், பின்னர் நவுருத்தீவுக்கு அனுப்பப்பட்டு அங்கு பல ஆண்டுகள் சிறை வைக்கப்பட்ட பின் மருத்துவ தேவை கருதி ஆஸ்திரேலியாவுக்கு அழைத்து செல்லப்பட்டனர். அங்கு அவர்கள் 3 ஆண்டுகள் ஹோட்டல் தடுப்பில் சிறைவைக்கப்பட்டிருந்தனர்.
ஆஸ்திரேலியா- அமெரிக்கா இடையே ஏற்பட்ட அகதிகள் ஒப்பந்தத்தின் கீழ், மெஹ்தி அலியும் அட்னானும் அமெரிக்காவில் மீள்குடியமர்த்தப்படுவதற்காக தற்போது அழைத்துச் செல்லப்பட்டிருக்கின்றனர். ஆனால், இவ்விடுதலை இந்த அகதிகளுக்கு மகிழ்ச்சியாக கொடுக்கவில்லை என்கின்றனர்.
“எனது நண்பர்கள் கண்ணீருடன் தடுப்பு முகாமில் உறங்கும் பொழுது, நான் மகிழ்ச்சியாக உணர்வது சுயநலமிக்கது மற்றும் தவறானது,” என தடுப்பில் உள்ள சக அகதிகளுக்காக மெஹ்தி அலி வருந்துகிறார்.