இலங்கை சுதந்திரம் அடைந்து 69 ஆண்டுகளை பூர்த்தி செய்திருக்கிறது.
1948ம் ஆண்டு இலங்கை பிரித்தானியர்களின் முழுமையான கட்டுப்பாட்டில் இருந்து விடுதலை பெற்றுக்கொண்டது.
எனினும், அன்றில் இருந்து இன்று வரை உள்நாட்டுக்குள் பல்வேறு பிரச்சினைகளும், சிறுபான்மையினருக்கு எதிரான அடக்குமுறைகளும் நீடித்தன.
இதனால், தமிழ் மக்கள் 30 ஆண்டுகள் அகிம்சைப் போராட்டத்திலும், 30 ஆண்டுகள் ஆயுத ரீதியிலான போராட்டத்தையும் முன்னெடுத்திருந்தனர்.
இந்நிலையில் தமிழ் இளைஞர்களின் ஆயுதப்போராட்டம் கடந்த 2009ம் ஆண்டு மே மாதம் 18ம் திகதியோடு மௌனிக்கப்பட்டது.
இலங்கை முழுவதும் மீண்டும் இலங்கை அரசாங்கத்தின் ஆதிக்கத்துக்குள் கடந்த 2009ம் ஆண்டு கொண்டுவரப்பட்டது.
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச இலங்கை மீண்டும் 2009ம் ஆண்டு சுதந்திரம் அடைந்ததாக அன்று அறிவித்தார்.
தன்னுடைய ஆட்சிக்காலத்தில் மிகப்பிரமாண்டான முறையில் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச சுதந்திர தின நிகழ்வுகளை ஏற்பாடு செய்திருந்தார்.
ஆனால், 2015ம் ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் மைத்திரிபால சிறிசேன வெற்றிபெற்றார். அதனைத் தொடர்ந்து அவர் பெரும் மனவுளச்சலில் இருந்து வந்தார் என செய்திகள் வெளியாகியிருந்தன.
இன்றைய தினம் நாட்டின் 69வது சுதந்திர தினம் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. முன்னாள் ஜனாதிபதி என்ற ரீதியிலும், யுத்தத்தை வென்றவர் என்ற அடிப்படையிலும் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச சுதந்திர தினத்தில் பங்கேற்று இருக்கவேண்டும்.
ஆனால். அவர் குருநாகலில் இருக்கிறார். அவரின் இந்தச் செயல் நாட்டின் இன்றைய அரசியல் நடவடிக்கைகள் மீதான அதிருப்தியை வெளிப்படுத்துவதாக கொழும்பு அரசியலை மேற்கோள்காட்டி தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.
ஏனெனில், முப்படைகளின் தளபதியாக, பாதுகாப்பு அமைச்சராக, போரை வென்ற தலைவராக தன்னைக்காட்டிக் கொண்ட ஒருவர், இன்று நாட்டின் சுதந்திர தினத்தை புறக்கணிப்பது சாதாரண விடையமாக நோக்க முடியாது என்கிறார்கள் அரசியல் நோக்குநர்கள்.
இதற்கிடையில் 69வது சுதந்திர தினத்தில் எதிர்க் கட்சித் தலைவர் இராஜவரோதயம் சம்பந்தன் கலந்து கொள்ளவில்லை.
இது குறித்து கருத்துவெளியிட்டுள்ள, நாடாளுமன்ற உறுப்பினர் திலும் அமுனுகம,
சுதந்திரம் கொண்டாடும் அளவில் உண்மையான சுதந்திரம் நாட்டினுள் இல்லை. எதிர்க் கட்சித் தலைவர் சம்பந்தன் சுதந்திர தின நிகழ்வில் பங்கேற்கவில்லை என ஊடகங்கள் குறிப்பிடுகின்றன.
இது நாட்டில் நடந்த வினோதமான செயல் என்றும் விமர்சித்திருக்கிறார்.
கடந்த சுதந்திர தின நிகழ்வின் போது எதிர்க்கட்சித் தலைவர் சம்பந்தன் கலந்துகொண்டிருந்தார்.
எனினும் இது தமிழர்கள் மத்தியில் பெரும் விமர்சனத்திற்கு உட்பட்டிருந்தது.
ஆனாலும், எதிர்க்கட்சித் தலைவர் சம்பந்தன் இன்றைய சுதந்திர தின நிகழ்வில் கலந்து கொள்ளாமைக்கான காரணத்தினை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் விளக்கியுள்ளார்.
திருகோணமலையில் உள்ள ஆலயமொன்றில் இடம்பெறும் கும்பாபிஷேக நிகழ்வில் கலந்து கொள்ளச் சென்றுள்ளமையால், எதிர்க்கட்சித் தலைவரால் சுதந்திர தின நிகழ்வில் கலந்து கொள்ள முடியவில்லை என்று குறிப்பிட்டிருக்கிறார் சுமந்திரன்.
இதேவேளை, சுதந்திரன நிகழ்வில் பங்கேற்காதது குறித்து கருத்து வெளியிட்ட வடக்கு மாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன், மக்கள் கஷ்டப்பட்டுக்கொண்டிருக்கும்போது எங்களுக்கு என்ன சுந்திரம் எனக் கேட்டுள்ளார்.
எதுவாயினும் நாட்டின் முக்கியமான தலைவர்கள் இல்லாமல் 69வது சுதந்திர தினம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் கோலாகலமாக நடைபெற்று முடிந்துள்ளது.