நடிகர் | ஜாக்கிசான் |
நடிகை | அமைரா தஸ்தூர் |
இயக்குனர் | ஸ்டான்லி டாங் |
இசை | நேதன் வாங் |
ஓளிப்பதிவு | விங் ஹாங் வோங் |
சீனாவில் மிகப்பெரிய தொல்பொருள் ஆராய்ச்சியாளராக இருக்கிறார் ஜாக்கிசான். இந்திய ராஜவம்சத்தை சேர்ந்த திஷா பதானி இவரை நேரில் சந்திக்கிறார். அப்போது, 1000 வருடங்களுக்கு முன் சீனா-இந்தியா உறவு நல்லமுறையில் இருந்தபோது, இந்தியாவில் இருந்து மரகதத்தால் செய்யப்பட்ட சாவி ஒன்றை சீனாவுக்கு கொண்டு வரும்போது, எல்லையில் பனிமலை சரிவில் சிக்கி, அந்த மரகத சாவி தொலைந்து விட்டதாகவும், அதை கண்டுபிடித்து தரும்படியும் கோருகிறார்.
ஜாக்கிசானும், தன்னுடைய உதவியாளர்களை அழைத்துக் கொண்டு பனிமலையில் காணாமல்போனதாக கூறப்படும் மரகதச் சாவியை தேடி புறப்படுகிறார். அதேநேரத்தில், இந்தியாவில் மற்றொரு ராஜ வம்சத்தை சேர்ந்த சோனு சூட், இவர்கள் மரகத சாவியை தேடி செல்வதை அறிந்து, அதை அடைவதற்காக தன்னுடைய ஆட்களை அனுப்பி அவர்களை வேவு பார்க்க வைக்கிறார். ஒருகட்டத்தில், அந்த மரகத சாவியை தேடிக்கண்டுபிடிக்கும் ஜாக்கிசான் மற்றும் அவரது உதவியாளர்களை சோனு சூட்டின் ஆட்கள் அடித்துப்போட்டுவிட்டு அந்த சாவியை அடைய பார்க்கிறார்கள்.
ஆனால், அதற்குள் ஜாக்கிசானின் உதவியாளர்களில் ஒருவன் அந்த மரகத சாவியை எடுத்துக் கொண்டு துபாய்க்கு சென்றுவிடுகிறான். அங்கு சென்று அந்த சாவியை அவன் ஏலம் விட பார்க்கிறான். இதை அறிந்த ஜாக்கிசானும், திஷா பாண்டேவும் துபாய்க்கு சென்று அந்த சாவியை ஏலம் எடுக்க நினைக்கிறார்கள். அதேநேரத்தில் சோனு சூட்டும் அந்த ஏலத்தில் கலந்துகொள்கிறார்.
அப்போது, சோனு சூட்டை விட அதிக விலை கொடுத்து ஜாக்கிசான் அந்த சாவியை ஏலத்தில் எடுத்துவிடுகிறார். இதனால் கோபமடைந்த சோனுசூட், மீண்டும் அந்த சாவியை அவர்களிடமிருந்து அபகரிக்க முயற்சிக்கிறார். அப்போது நடக்கும் சண்டையில், அந்த சாவி திஷா பதானி கைவசம் செல்ல, அதை அவள் எடுத்துக் கொண்டு இந்தியாவுக்கு வந்துவிடுகிறாள்.
இதையடுத்து, திஷா பதானியை தேடி ஜாக்கிசானும், சோனு சூட்டும் இந்தியாவுக்கு வருகிறார்கள். இந்தியாவுக்கு வந்து திஷா பதானியை சந்திக்கும் ஜாக்கிசானிடம், அந்த சாவி, ஒரு கோவிலில் இருக்கும் புதையல் அறைக்குண்டான சாவி என்பதை கூறுகிறாள். அந்த புதையலை வைத்து தான் நல்லது செய்ய நினைப்பதாகவும் கூறும் திஷாபதானிக்கு ஜாக்கிசான் உதவ நினைக்கும் நேரத்தில், சோனு சூட், ஜாக்கிசானின் உதவியாளர்களை கடத்தி வைத்துக் கொண்டு அந்த புதையலை கண்டுபிடித்து தருமாறு கேட்கிறார்.
இறுதியில், அந்த புதையலை கண்டுபிடித்தார்களா? அந்த புதையல் யார் கைவசம் சென்றது? என்பதே மீதிக்கதை.
ஜாக்கிசான் நீண்ட இடைவெளிக்கு பிறகு, ஒரு காமெடி கலந்து ஆக்ஷன் படத்தில் நடித்து நம்மை எல்லோரையும் சிரிக்க வைத்து ரசிக்க வைத்திருக்கிறார். பெரும்பாலான காட்சிகள் சிறுவர்கள் கவரும்படி அமைந்திருப்பது சிறப்பு. தனக்கு மட்டுமில்லாமல், பிற நடிகர்களுக்கும் நடிக்க வாய்ப்பு கொடுத்திருக்கிறார். அதை பாராட்டியே ஆகவேண்டும்.
குறிப்பாக, காருக்குள் சிங்கத்துடன் பயணிக்கும்போது, பயந்துகொண்டே இவர் செய்யும் முகபாவனைகள் எல்லாம் ரசிக்க வைக்கின்றன. அதேபோல், பனிக் குகைக்குள் இவர் எதிரிகளை துவம்சம் செய்யும் காட்சிகள் எல்லாம் ரசிகர்களை கவர்ந்திருக்கின்றன. அதேபோல், சண்டைக் காட்சியிலும் ஒரு நகைச்சுவை இருக்கும்படி தனது வழக்கமான நடிப்பை கொடுத்து ரசிகர்களை சிரிப்பலையில் ஆழ்த்தியிருக்கிறார். அதேபோல், இந்தியர்களுடன் சேர்ந்து இவர் ஆடும் காட்சிகளில் அவர்களுக்கு இணையாக நடனமாடி அனைவரையும் ஆச்சர்யப்பட வைத்திருக்கிறார்.
தோனி படத்தின் மூலம் பிரபலமான திஷா பதானி, இந்த படத்தில் ஒரு ஹாலிவுட் ஹீரோயின் அளவுக்கு தனது உடல்வாகை வைத்து நடித்திருக்கிறார். இந்த படத்தில் சண்டைக் காட்சியிலும் தனது திறமையை வெளிப்படுத்தியிருக்கிறார். இவருக்கு தங்கையாக வரும் அனேகன் பட நாயகி அமைரா தஸ்தூரும் தனக்கு கொடுக்கப்பட்ட கதாபாத்திரத்தை சிறப்பாக செய்திருக்கிறார்.
வில்லனாக வரும் சோனு சூட்டுக்கு, மீண்டும் தனது திறமையை வெளிப்படுத்தக்கூடிய வலுவான கதாபாத்திரம். அதை அவர் சிறப்பாக செய்திருக்கிறார். டான்ஸ், ஆக்ஷன் என எல்லாவற்றையும் சிறப்பாகவே செய்திருக்கிறார்.
இயக்குனர் ஸ்டான்லி டாங் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை ரசிக்கும்படியான ஒரு படத்தை கொடுத்திருக்கிறார் என்றுதான் சொல்லவேண்டும். ஜாக்கிசான் ரசிகர்களின் மனநிலையை புரிந்துகொண்டு, அவர்களுக்கு ஏற்றவாறு கதையை நகர்த்தி, அதில் ஆக்ஷன், நகைச்சுவை என கலந்து எந்த இடத்திலும் போரடிக்காதவாறு திரைக்கதையை அமைத்திருக்கிறார்.
கதைப்படி இப்படம் சீனா, இந்தியா, துபாய் என பயணமாகி இறுதியில் இந்தியாவில் வந்தே முடிகிறது. இந்திய கலைகளை இந்த படத்தில் அழகாக எடுத்துச் சொல்லியிருக்கிறார்கள். ஹாலிவுட் படம் என்ற வரைமுறைகளை தாண்டி இப்படம் இந்திய ரசிகர்களையும் கவரும் படி எடுத்திருப்பது மிகவும் சிறப்பு.
நாதன் வாங் இசையில் படத்தில் ஒரேயொரு பாடல்தான். இசைக்கு மொழி கிடையாது என்பதற்கு இந்த பாடலே சாட்சி. அந்தளவுக்கு ஹாலிவுட் இசைக்கலைஞராக இருந்தாலும் இந்திய ரசிகர்களுக்கு ஏற்றவாறு அந்த பாடலை கொடுத்து, அதை காட்சியப்படுத்திய விதத்திலும் ரசிகர்களை திருப்திபடுத்தியிருக்கிறார். பின்னணி இசையிலும் தனது திறமையை நிரூபித்திருக்கிறார்.
விங் ஹாங் வோங் ஒளிப்பதிவும் படத்திற்கு பக்கபலமாக கைகொடுத்திருக்கிறது. இவரது கேமரா படத்தின் ஒவ்வொரு காட்சிகளையும் கலர் புல்லாக காட்டியிருக்கிறது. சண்டைக் காட்சிகளில் இவரது கேமராக்களின் கோணம் ரசிகர்களை வியப்படைய வைத்திருக்கிறது.
மொத்தத்தில் ‘குங்பூ யோகா’ ஆரோக்கியம்.