இரண்டு ஆண்டுகளின் பின்னர் இன்று (ஞாயிற்றுக்கிழமை) அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு போட்டி கோலாகலமாக நடைபெற்று வருகிறது.
காளைகளை அடக்கும் முயற்சியில் மாடுபிடி வீரர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ள நிலையில், பொது மக்களும் மிகுந்த வரவேற்பு அளித்து வருகின்றனர்.
தமிழக அரசின் ஜல்லிக்கட்டு அவசரச் சட்டத்தில் குறிப்பிட்டுள்ளவாறு, தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும், சட்ட விதிகளையும் அமுல்படுத்துவதை மதுரை மாவட்ட ஆட்சியர் வீர ராகவ ராவ் முன்னின்று கவனித்து வருகிறார்.
இதன்படி 15 மருத்துவ குழுவினர், இரண்டு கால்நடை மருத்துவ ஆம்புலன்ஸ், 8 ஆம்புலன்ஸ்கள், 5 தீயணைப்பு வாகனங்கள் தயார் நிலையில் உள்ளதாக கூறப்படுகின்றது.
ஜல்லிக்கட்டில் கலந்து கொள்ளவதற்காக காளைகளை பதிவு செய்யும் பணி கடந்த இரண்டு நாட்களாக நடைபெற்றது. இதில் சுமார் 916 காளைகள் பதிவு செய்யப்பட்டுள்ளதோடு, அவனியாபுரம் ஜல்லிக்கட்டில் 963 மாடுபிடி வீரர்கள் பங்கேற்றுள்ளனர்.
தமிழகத்தில் நடைபெற்ற ஜல்லிக்கட்டுக்காக புரட்சி, மத்திய, மாநில அரசுகளை அதிரவைத்தது. பின்னர் அவசர சட்டம் பிறப்பிக்கப்படடு சட்டம் நிறைவேற்றப்பட்டது.
இதனையடுத்தே மிகுந்த பலத்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு நடைபெற்று வருகிறது.