முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை அனுபவித்து வரும் நளினி, தனது மகள் திருமணத்துக்கு ஆறு மாதம் பரோல் கோரி சிறைத் துறையிடம் மனு கையளித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட முருகன், அவரது மனைவி நளினி இருவரும் வேலூர் சிறையில் வைக்கப்பட்டுள்ள நிலையில், இவர்கள் இருவரையும் நேற்று காலை (சனிக்கிழமை) 10.30 மணியளவில் அவரது வழக்கறிஞர் புகழேந்தி சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.
சுமார் 1½ மணி நேரம் நீடித்த குறித்த சந்திப்பின் பின்னர் செய்தியாளர்களிடம் கருத்து தெரிவித்த வழக்கறிஞர்,
‘ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை அனுபவித்து வருபவர்களை நளினி உள்ளிட்டோரை விடுதலை செய்ய தமிழக அரசு 2014-ம் ஆண்டு தீர்மானம் கொண்டு வந்தது.
இதுதொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் இடம்பெற்று வருகின்ற நிலையில் வழக்கின் இறுதி கட்ட விசாரணை எதிர்வரும் 7ஆம் திகதி நடைபெற உள்ளது.
எனவே இது தொடர்பாக நளினி- முருகனை சந்தித்து விவாதித்தேன். உச்சநீதிமன்றத்தில் சாதகமாக அமையாத பட்சத்தில் அரசியலமைப்பு சட்டத்தின் 161-வது விதியை பின்பற்றி தமிழக அரசு விடுதலை செய்ய வேண்டும்.
மேலும் தனது மகள் திருமணத்துக்காக ஆறு மாதம் பரோல் கேட்டு சிறைக் கண்காணிப்பாளர் மூலம் உயரதிகாரிக்கு கடந்த ஜனவரி மாதம் 23-ஆம் திகதி நளினி மனு அனுப்பியுள்ளார்.
இவர்களது விடுதலைக்காக மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மேற்கொண்ட நடவடிக்கைகளைப் போல தற்போதைய அரசும் எடுக்க வேண்டும்’ என்று தெரிவித்துள்ளார்.