இலங்கையின் வடக்கு கிழக்கில் இந்தியாவின் பொருளாதார ஆதி;க்கம் அதிகரிக்கும் வகையிலான உடன்படிக்கைகளின் பின்னர், பசில் ராஜபக்சவின் இந்திய பயணம் உறுதிச்செய்யப்பட்டுள்ளது.
இதன்படி அவசர உணவு மற்றும் எரிபொருள் கொள்வனவின் நிமித்தம்,இந்தியாவிடம் இருந்து ஒரு பில்லியன் டொலர்களை பெற்றுக்கொள்ளும் சந்திப்புக்காக இலங்கையின் நிதியமைச்சர் பசில் ராஜபக்ச, எதிர்வரும் வாரத்தில் இந்தியாவுக்கு செல்லவுள்ளார்.
இதனை இலங்கையில் உள்ள இந்திய உயர்ஸ்தானிகரகம் அறிவித்துள்ளது.
ஏற்கனவே இரண்டு தடவைகளாக பசில் ராஜபக்சவின் இந்திய பயணம் இடைநிறுத்தப்பட்டிருந்தது
எனினும் கடந்த வாரத்தில் இந்தியாவுடன் செய்துக்கொள்ளப்பட்ட இரண்டு உடன்படிக்கைகளின் பின்னர் அவரின் இந்திய பயணம் உறுதிச்செய்யப்பட்டுள்ளதாக கொழும்பின் அரசியல் தரப்புக்கள் சுட்டிக்காட்டுகின்றன.
கடந்த வெள்ளிக்கிழமை கொழும்பில் கையெழுத்திடப்பட்ட ஒரு உடன்படிக்கை- திருகோணமலை சம்பூரில் 100 மெகாவாட் சூரிய மின் உற்பத்தி நிலையத்துக்கான உடன்படிக்கையாக அமைந்திருந்தது.
இந்த உடன்படிக்கை, இந்தியாவினால் இலங்கையிடம் நீண்ட நாட்களாக கோரப்பட்டு வந்த உடன்படிக்கையாகும்.
அத்துடன் மன்னாரில் 500 மெகாவாட் காற்றாலை மின் திட்டத்தை உருவாக்க இந்தியாவின் அதானி கிரீன் எனர்ஜி நிறுவனத்துடன் மற்றும் ஒரு புரிந்துணர்வு உடன்படிக்கையும் கையெழுத்தாகியுள்ளது.
மன்னாரில் இதற்கான இடம் இன்னும் அடையாளம் காணப்படவில்லை.
எனினும் அது கரையோரமாக அமைந்திருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதேவேளை இலங்கையி;ல் மின்சாரத்திட்டங்களுக்கு கேள்விப்பத்திரங்கள் கோரப்படவேண்டும் என்ற போதிலும், அதானி நிறுவனத்தின் இந்த உடன்படிக்கைக்கு எவ்வித கேள்விப்பத்திரங்களும் கோரப்படவில்லை.
அரசாங்கத்;துக்கு-அரசாங்கம் என்ற அடிப்படையில் அது தவிர்க்கப்பட்டுள்ளது.