பெண்ணொருவரிடம் மோசடியான முறையில் பல இலட்சம் ரூபாவை கொள்ளையடித்த கும்பல் ஒன்றை பொலிஸார் நேற்று கைது செய்துள்ளனர்.
இந்த குற்றச்சாட்டின் அடிப்படையில் பெண் ஒருவர் உட்பட மூவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
கையடக்க தொலைபேசி நிறுவனம் ஒன்றில் நடாத்தப்பட்டு வரும் போட்டி ஒன்றில் வெற்றி பெற்றுள்ளதாக தெரிவித்து தன்னை ஏமாற்றி, ஈஸி கேஷ் (eZ Cash) இன் மூலம் பணம் அனுப்புமாறு தெரிவித்து மோசடி செய்ததாக குறித்த பெண் முறைப்பாடு செய்துள்ளார்.
கடந்த ஜனவரி 28 ஆம் திகதி, கல்கிஸ்ஸை குற்ற விசாரணை பிரிவில் மேற்கொள்ளப்பட்ட குறித்த முறைப்பாட்டை அடுத்து, குறித்த கும்பலை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
குறித்த பெண்ணுக்கு பரிசுத் தொகையாக கிடைத்துள்ள பணத்தை பெற்றுக்கொள்ளும் பொருட்டு, ஈஸி கேஷ் முறையில் பணத்தை அனுப்புமாறு தெரிவித்து, குறித்த பெண்ணிடமிருந்து சிறிது சிறிதாக சூசகமான முறையில் ரூபா 1,176,000 பணத்தை பெற்றுள்ளனர்.
இதனை அடுத்து நேற்றைய தினம் குறித்த பெண்ணிடமிருந்து மேலும் ரூபா 2 இலட்சத்து 30 ஆயிரம் பணத்தை பெற்றுக் கொள்ள முயற்சித்த வேளையில், பொலிஸார் குறித்த கும்பலை கைது செய்துள்ளனர்.
சந்தேகநபர்கள் 43, 37, 50 ஆகிய வயதுடைய, வெல்லம்பிட்டி, கொலன்னாவ, மாவனல்லை ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்தவர்கள் என பொலிஸார் தெரிவித்தனர்.
சந்தேகநபர்களை இன்றைய தினம் (05) கல்கிஸ்ஸை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்துவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாகவும், இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கல்கிஸ்ஸை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர் எனவும் பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
இதேபோன்று பல்வேறு நபர்கள் மோசடியில் ஈடுபட்டுள்ள நிலையில், அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். எனவே நாட்டு மக்கள் அவதானமாக இருக்குமாறு பொலிஸார் அறிவுறுத்தல் விடுத்துள்ளனர்.