நல்லாட்சி மற்றும் ஜனநாயகம் தொடர்பில் வாக்களித்து பதவிக்கு வந்த அரசாங்கம், அடக்குமுறையை நோக்கி அடிவைத்துக் கொண்டிருப்பதாக பேராசிரியர் சுமனசிறி லியனகே விமர்சித்துள்ளார்.
இது குறித்து வார இறுதி செய்திப் பத்திரிகை ஒன்றுக்கு அவர் அளித்துள்ள நேர்காணலில்,
இந்த அரசாங்கம் பொதுமக்களைக் கவரும் வகையிலான கவர்ச்சிகரமான வாக்குறுதிகளை அள்ளிவீசி பதவிக்கு வந்தது.
அவற்றில் வரிச்சுமையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்கி, சமச்சீரான பொருளாதாரக் கொள்கையொன்றை அறிமுகப்படுத்தல், எதிர்க்கருத்துக்களை அடக்குமுறை மூலம் கட்டுப்படுத்துவதற்குப் பதில் ஜனநாயகத்தை வலுப்படுத்தல், ஊழல் மற்றும் மோசடிகள் அற்ற நிர்வாகம் என்பன அவற்றில் முக்கியமானவையாகும்.
அத்துடன் கடந்த ஆட்சியில் தமிழ், முஸ்லிம் சிறுபான்மை மக்கள் கொண்டிருந்த அதிருப்தியும் இந்த அரசாங்கத்தைப் பதவிக்குக் கொண்டு வர பெருமளவில் உதவியது.
ஆனாலும் மேற்குறித்த எந்தவொரு விடயத்திலும் இந்த அரசாங்கம் முன்னைய அரசாங்கத்தை விட மாறுபட்டிருப்பதாகவோ, மேம்பட்ட நிலையை அடைந்துள்ளதாகவோ கூற முடியாது. அதற்குப் பதில் முன்னைய அரசாங்கத்தின் செயற்பாடுகள் முன்னரை விடவும் கூடுதலாக தற்போது நடைபெற்று வருகின்றது.
அத்துடன் அரசாங்கத்துக்கு எதிராக கருத்துக்களை வெளியிடுவோர் மற்றும் கோரிக்கைகளை முன்வைத்து போராட்டங்களில் ஈடுபடுவோரை பொலிசாரைக் கொண்டு அடக்கி வைப்பதில் அரசாங்கம் தீவிர ஆர்வம் காட்டுகின்றது.
இந்த அரசாங்கத்தின் நண்பனாக செயற்படும் ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையமே இது தொடர்பில் அரசாங்கத்திற்கு கண்டனம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
இவ்வாறான நிலையில் தொடர்ந்தும் அரசாங்கம் ஜனநாயகத்துக்குப் பதில் அடக்குமுறை நோக்கி பயணித்துக் கொண்டிருப்பதாகவே தோன்றுகின்றது.
இது நல்லாட்சி மற்றும் ஜனநாயகத்தை எதிர்பார்த்த மக்களுக்குப் பெரும் ஏமாற்றமாக அமையப் போகின்றது என்றும் பேராதனை பல்கலைக்கழக அரசியல் விஞ்ஞான பேராசிரியர் சுமனசிறி லியனகே தொடர்ந்தும் விமர்சித்துள்ளார்.