ஜெயலலிதாவின் மரணம் தொடர்பாக எந்த விவரத்தையும் விசாரணையின் போது வழங்க தயாராக உள்ளோம் என்று அப்பல்லோ மருத்துவமனை தலைவர் பிரதாப் சி.ரெட்டி கூறியுள்ளார்.
முன்னாள் ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட மருத்துவ சிகிச்சையில் எந்தவிதமான ஒளிவுமறைவும் இல்லை. ஜெயலலிதாவின் கால்கள் எடுக்கப்பட்டதாக வெளியான செய்தி உண்மை இல்லை. அது வதந்தி என்று அப்பல்லோ மருத்துவமனை தலைவர் பிரதாப் சி.ரெட்டி கூறியுள்ளார். தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா திடீர் உடல்நலக்குறைவு காரணமாக சென்னை அப்பல்லோ மருத்துவமனையில், கடந்த ஆண்டு செப்டம்பர் 22ஆம்தேதி இரவு அனுமதிக்கப்பட்டார். தொடர்ந்து 75 நாட்களாக சிகிச்சை பெற்று வந்தார்.
அவர் குணமடைந்து விட்டதாக கூறப்பட்ட நிலையில் திடீரென மரணமடைந்தார். அவரது மரணத்தில் மர்மம் இருப்பதாக கூறப்படுகிறது. நீதிமன்றத்தில் இது தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட வழக்குகள் விசாரணையில் உள்ளன.
அப்போலோ மருத்துவமனை, இந்திய இதய செயலிழப்பு சங்கம் இணைந்து இதய செயலிழப்பு-360 டிகிரி என்ற தலைப்பில் மூன்றாவது ஆண்டு மாநாடு சென்னை கிண்டியில் தொடங்கியது. இந்த விழாவில் பங்கேற்ற அப்பல்லோ மருத்துவமனை தலைவர் பிரதாப் சி.ரெட்டி, பங்கேற்று பேசினார்.
விசாரணைக்கு தயார்
செய்தியாளர்களிடம் பேசிய பிரதாப் சி.ரெட்டி, ஜெயலலிதாவின் மரணம் தொடர்பாக எந்த விவரத்தையும் விசாரணையின் போது வழங்க தயாராக உள்ளோம். விசாரணையை பொறுத்தவரை எங்களது நிலை திறந்த புத்தகமாகவே உள்ளது. ஜெயலலிதா மரணம் தொடர்பாக எந்த விசாரணைக்கும் தயாராக உள்ளோம்.
கால்களை எடுக்கவில்லை
உடல்நிலை தேறிவந்த நிலையில் மாரடைப்பு ஏற்பட்ட அந்த ஒரு நிமிடம் மட்டுமே பின்னடைவை ஏற்படுத்திவிட்டது. அவரது உடல்நிலையில், எந்த பிரச்சினையும் இல்லை. அவர் தெளிவாக இருந்தார். ஜெயலலிதாவின் கால்கள் எடுக்கப்பட்டதாக வெளியான செய்தி உண்மை இல்லை. அது வதந்திதான் என்றார்.
மரணத்தில் மர்மம்
ஜெயலலிதா பூரணமாக குணமடைந்து விட்டதாக கூறப்பட்ட நிலையில், இதய முடக்கம் ஏற்பட்டு கடந்த ஆண்டு டிசம்பர் 5ஆம்தேதி காலமானார். அவரது உடல்நிலை குறித்து பல்வேறு வதந்திகள் கிளம்பின. ஆனால் இவை மறுக்கப்பட்டது. அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டதிலும், மரணத்திலும் மர்மம் இருப்பதாகவும் கூறப்பட்டு வரும் நிலையில் பிரதாப் சி. ரெட்டி 60 நாட்களுக்குப் பின்னர் தற்போது விளக்கம் அளித்துள்ளார்.
சசிகலா உடன் சந்திப்பு
பிரதாப் சி ரெட்டியின் மகள் பிரீத்தா ரெட்டி சில தினங்களுக்கு முன்னர் போயஸ்கார்டனுக்கு சென்று தனது மகனின் திருமண விழா அழைப்பிதழை கொடுத்து விட்டு வந்தனர். அப்போது விரிவாக பேசியதை அடுத்தே பிரதாப் சி ரெட்டி இப்போது பேட்டி கொடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.