உக்ரைனுக்கு எதிராக சண்டையிட்டு வரும் ரஷியாவுக்கு எதிராக சிலவற்றில் இந்தியா நடுங்குகிறது என அமெரிக்க அதிபர் தெரிவித்துள்ளார்.
உக்ரைன் மீது ரஷியா தாக்குதல் நடத்தி வருகிறது. அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் போரை நிறுத்துமாறு வலியுறுத்தியும் ரஷியா போரை நிறுத்தவில்லை. உக்ரைன் ராணுவம் ஆயுதங்களை கீழே போடும் வரை போரை நிறுத்த மாட்டோம் என ரஷிய அதிபர் புதின் அறிவித்துள்ளார்.
உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி பேச்சுவார்த்தைக்கு அழைப்பு விடுத்தும் எந்த பயனும் இல்லை. இதற்கிடையே அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் ரஷியா மீது பொருளாதாரத் தடை விதித்துள்ளது.
ஐரோப்பிய நாடுகள், நேட்டோ நாடுகள் என பல்வேறு நாடுகளை கொண்ட அமைப்புகளும் ரஷியாவுக்கு எதிராக உள்ளது. இதேபோல் குவாட் அமைப்பில் இந்தியா, ஜப்பான், ஆஸ்திரேலியா உள்ளது. இதில் இந்தியாவை தவிர மற்ற நாடுகள் ரஷியாவுக்கு எதிராக உள்ளன.
இந்தியா ஐ.நா. சபயைில் நடைபெற்ற வாக்கெடுப்பில் உக்ரைனுக்கு ஆதரவாக வாக்களிக்காமல் வெளிநடப்பு செய்தது. பொருளாதாரத்தடை காரணமாக ரஷியா கச்சா எண்ணெயை விற்பனை செய்ய முடியாமல் உள்ளது. இதனால் மலிவு விலையில் விற்க முடிவு செய்தது.
ரஷியாவின் மலிவு விலை கச்சா எண்ணெயை வாங்க இந்தியா முடிவு செய்துள்ளது. இதில் அமெரிக்காவுக்கு அதிருப்தி அளித்துள்ளது. தங்களுன் நட்பில் உள்ள அனைத்து நாடுகளும் ரஷியாவுக்கு எதிராக இருக்கும்போது இந்தியா மட்டும் தனித்து இருப்பதாக அமெரிக்கா உணர்கிறது.
நேற்று வாஷிங்டனில் அமெரிக்க தொழில் அதிபர்கள் கூட்டம் நடைபெற்றது. இதில் ஜோ பைடன் கலந்து கொண்டார். அப்போது பேசிய ஜோ பைடன், ‘‘நேட்டோ மற்றும் பசிபிக் நாடுகள் ஒருங்கிணைந்து இருக்கிறது. ஆனால், குவாட் அமைப்பில் இந்தியா சிலவற்றில் நடுங்கும் நிலை உள்ளது. ஆனால், ஜப்பான் அதிக அளவில் எதிர்க்கிறது. ஆஸ்திரேலியாவும் அப்படித்தான் உள்ளது.
புதின் நேட்டோவை பிரித்து விடலாம் என நினைக்கிறார். அதற்குப் பதிலாக நேட்டோ அதன் முழு வரலாற்றிலும் இன்று இருப்பதை விட வலிமையாக ஒன்றுபட்டதாக இருந்ததில்லை’’ என்றார்.