தமிழக சட்டசபையில் இன்று எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, விருதுநகர் பாலியல் சம்பவம் தொடர்பான பிரச்சினையை எழுப்பி பேசினார்.
அப்போது அவர் கூறும்போது, ‘விருதுநகர் கஸ்தூரிபாய் நகரை சேர்ந்த 22 வயது பெண்ணுடன் அதே பகுதியை சேர்ந்த ஹரிகரன் என்பவர் பழகி வந்துள்ளார். அவரும் ஜீனத் அகமது, மாடசாமி உள்ளிட்டோர் 6 மாதமாக கூட்டு பாலியல் பலாத்காரம் செய்து பாலியல் வன்முறையில் ஈடுபட்டுள்ளனர்.
இதுபோன்று எத்தனை பெண்களை அவர்கள் பாலியல் ரீதியாக துன்புறுத்தினார்கள் என்பது தெரியவில்லை. இதுபற்றி முறையாக விசாரித்து குற்றம் செய்தவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
இதே போன்று வேலூரில் பெண் மருத்துவர் கூட்டு பலாத்காரம் செய்யப்பட்டது பற்றியும், சென்னையில் ஓய்வு பெற்ற நீதிபதியின் பாதுகாவலர் அரிவாளால் வெட்டப்பட்ட விவகாரம் குறித்தும் குறிப்பிட்ட எடப்பாடி பழனிசாமி சம்பந்தப்பட்ட குற்றவாளிகள் மீதும் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பதில் அளித்து விரிவாக பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
எதிர்க்கட்சி தலைவர் இங்கு சட்டம்-ஒழுங்கு பிரச்சினை குறித்து பேசினார். மாவட்டத்தில் நடைபெற்ற சம்பவத்தை பொறுத்தவரை சத்துவாச்சேரி இந்திரா நகரை சேர்ந்த ராமன் 17.3.2022 அன்று கொடுத்த புகாரில் வ.உ.சி. நகரை சேர்ந்த பாலா, மணிகண்டன் ஆகியோர் குடிபோதையில் தாக்கியதாக கொடுத்த புகாரில் நடவடிக்கை எடுத்த போலீசார் மணிகண்டன் உள்ளிட்ட 3 பேரை பிடித்து விசாரித்தனர்.
சம்பவத்தன்று அதிகாலை ஒரு ஆண், ஒரு பெண் ஆகியோர் சி.எம்.சி. மருத்துவமனைக்கு செல்ல வேண்டும் என ஆட்டோவில் ஏறியபோது பரத் சந்தோஷ், மணிகண்டன் உள்பட 5 பேர் அந்த பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ததாகவும், அவருடன் இருந்தவரின் ஏ.டி.எம். கார்டை பயன்படுத்தி ரூ.40 ஆயிரம் பறித்ததும் தெரியவந்தது.
அந்த பெண் பீகார் மாநிலத்தை சேர்ந்தவர் ஆவார். சி.எம்.சி. மருத்துவமனையில் பணிபுரிபவர் என தெரியவந்தது. பாதிக்கப்பட்ட பெண் மருத்துவருடன் இருந்த ஆணும் அதே மருத்துவமனையில் வேலை பார்ப்பதும் தெரியவந்தது.
அந்த பெண் சொந்த ஊருக்கு சென்று இணைய தளம் மூலம் புகார் அளித்ததை தொடர்ந்து வேலூர் வடக்கு போலீசார் பல்வேறு பிரிவுகளில் வழக்கு போட்டனர். வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு போடப்பட்டு 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
விருதுநகர் சம்பவத்தை பொறுத்தவரையில் 24 மணி நேரத்துக்குள் 4 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். மேலும் 4 பேர் கூர்நோக்கு இல்லத்தில் அடைக்கப்பட்டுள்ளனர். தற்போது இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கு மாற்றப்பட்டுள்ளது.
போலீஸ் சூப்பிரண்டு முத்தரசி சிறப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார். இதில் 60 நாட்களுக்குள் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படும். இந்த வழக்கு தனி நீதிமன்றத்துக்கு எடுத்து செல்லப்பட்டு விசாரணை தீவிரப்படுத்தப்படும்.
இதில் குற்றவாளிகளுக்கு அதிகபட்ச தண்டனை பெற்றுத்தரப்படும்.
மேலும் விருதுநகர் சம்பவத்தை மாடல் வழக்காக எடுத்துக்கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என டி.ஜி.பி.க்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்த வழக்கு விசாரனையை டி.ஜி.பி. நேரடியாக கண்காணிப்பார். நிச்சயமாக பொள்ளாச்சி பாலியல் வழக்கு போல் இல்லாமல் குற்றவாளிகளுக்கு எப்படி தண்டனையை பெற்று தருகிறோம் என்பதை பாருங்கள். இந்தியாவுக்கு இந்த வழக்கு முன்மாதிரியாக இருக்கும்.
காவல் ஆணைய தலைவர் ஓய்வுபெற்ற நீதியரசர் செல்வம் அசோக் நகர் அருகே காரில் சென்றபோது அவருடன் இருந்த பாதுகாவலர் சக்திவேல் தாக்கப்பட்டுள்ளார். நீதியரசரின் கார் முன்பு 3 பேர் இரு சக்கர வாகனத்தில் நின்றபோது அந்த வண்டியை எடுக்குமாறு பாதுகாவலர் கூறியுள்ளார்.
அப்போதுதான் தாக்குதல் நடந்துள்ளது. இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். நானே நீதியரசர் செல்வத்திடம் இதுபற்றி போனில் விசாரித்தேன்.
இவ்வாறு மு.க.ஸ்டாலின் பேசினார்.