குழந்தைகளுக்கு 8 முதல் 15 வயதிற்குள் பற்களை சீரமைப்பது சிறந்தது. இந்த வயதில், பற்கள் விழுந்து முளைக்கும் என்பதால், குறைந்த காலத்தில் பற்களை சீரமைக்கலாம்.
முக அழகை அதிகரிப்பதில் பற்கள் முக்கியமானவை. சீரற்ற பல்வரிசையால் மனதளவில் பாதிக்கப்படுபவர்கள் பலர் உள்ளனர். பற்களின் அமைப்பை குழந்தைப் பருவத்தில் இருந்தே சீரமைக்கத் தொடங்கினால் எளிதாக இருக்கும். வரிசையாக இல்லாமல் முன்னும் பின்னுமாக இருக்கும் பல்வரிசையை, ‘பிரேஸ்’ எனும் கிளிப் அமைத்தல் மூலம் ஒழுங்குபடுத்தலாம்.
குழந்தைகளுக்கு 8 முதல் 15 வயதிற்குள் பற்களை சீரமைப்பது சிறந்தது. இந்த வயதில், பற்கள் விழுந்து முளைக்கும் என்பதால், குறைந்த காலத்தில் பற்களை சீரமைக்கலாம்.
குழந்தைகளுக்கு ஏற்ற சில பிரேஸ் வகைகள்:
மெட்டல் பிரேஸ்:
குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைத்து தரப்பினருக்கும் பொதுவாகப் பரிந்துரைக்கப்படுவது ‘மெட்டல் பிரேஸ்’. சிறிய உலோகத்தைக் கொண்டு அமைக்கப்படும் இந்த பிரேஸ், ஒவ்வொரு பல்லையும் நன்றாகப் பற்றும் வகையில் அமைக்கப்படும். உலோகக் கம்பி இந்த அடைப்புக்குறிக்குள் சென்று பற்களை ஒன்றாக இணைக்கும். பற்களுக்கான இடைவெளியைச் சரி செய்யும் வகையில், எலாஸ்டிக் அமைக்கப்பட்டிருக்கும். சீரான இடைவெளியில் தேவையான இடங்களில் கம்பியை இறுக்குவதால் விரும்பிய பல் அசைவு பெறலாம்.
செராமிக் பிரேஸ்:
இந்த செராமிக் பிரேஸ் பற்களின் நிறத்திற்கு ஏற்ப இருக்கும். அதை இணைக்கும் கம்பி உலோகத்தால் வடிவமைக்கப்பட்டிருக்கும். உலோகம், செராமிக் இரண்டும் ஒரே கால அளவையும், ஒரே பயன்பாட்டையும் கொண்டிருக்கும். இந்த வகை, 10 வயதிற்கு மேற்பட்ட சிறுவர்களுக்குப் பரிந்துரைக்கப்படும்.
உள்ளடங்கிய பிரேஸ்:
சிலருக்குப் பற்கள் வளரும்போது, முன்னும், பின்னுமாக இருக்கும். இதை ஒரே சீராக மாற்ற தகுந்த பிரேஸ் பற்களுக்கு உட்புறமாக அமைக்கப்படும் என்பதால், வெளியில் தெரியாது. இந்த அமைப்பில் பற்களைச் சுத்தம் செய்வதில் மட்டும் சிரமம் ஏற்படும். இதற்கான கால இடைவெளியும் சற்று அதிகமாகும். 12 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கும், இளைஞர்களுக்கும் இது பரிந்துரைக்கப்படும்.
கிளியர் அலைனர்:
இதனை மிகவும் எளிதாக எந்த வயதினரும் அணியலாம். மருத்துவ உதவி தேவையின்றி சுயமாக இதை அணிந்து கொள்ள முடியும். ஆன்லைனில் இந்த வகையான பிரேஸ் கிடைக்கும் என்றாலும், மருத்துவரை அணுகி பற்களின் தன்மைக்கேற்ப சரியான அளவை தேர்வு செய்து அணிவது சிறந்தது. சீரற்ற பல் வரிசை இருப்பவர்களுக்கு இது பொருந்தாது.
பராமரிக்கும் முறைகள்:
கிளிப் அமைத்தபின், உண்ணும் உணவு முதல் அனைத்திலும் கவனம் வேண்டும். ஒவ்வொரு முறை சாப்பிட பிறகும் பற்களைச் சுத்தம் செய்வது அவசியம். கிளிப்களின் இடையில் உணவுத் துகள் தேங்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும். அதற்கேற்ப, பிரஷ்களைத் தேர்வு செய்ய வேண்டும். அதிக அடர்த்தி இல்லாத மவுத் வாஷை பயன்படுத்தி வாயை சுத்தம் செய்வது சிறந்தது.
குறைந்தபட்சம் 3 முதல் 6 மாத இடைவெளியில் மருத்துவரை அணுகி பற்களைச் சுத்தம் செய்வது அவசியம்.