தமிழகத்தின் 12வது முதல்வராக தெரிவு செய்யப்பட்டுள்ள சசிகலா நடராஜன் கடந்து வந்த பாதை,
60 வயதாகும் சசிகலா திருவாரூர் மாவட்டம் திருத்துறைபூண்டியை சேர்ந்த மருந்துக்கடை உரிமையாளர் விவேகானந்தன்- கிருஷ்ணவேணி தம்பதியின் 5வது மகளாக பிறந்தார்.
இவருக்கு 4 சகோதரர்கள் மற்றும் 1 சகோதரி உள்ளார். திருத்துறைப்பூண்டியில் பத்தாம் வகுப்பு வரை படித்தார்.
அதன்பிறகு அவரது குடும்பத்தினர் மன்னார்குடியில் குடியேறினர். 1976 ஆம் ஆண்டு கருணாநிதி தலைமையில் செய்தித்துறையில் பணியாற்றிய நடராஜன் என்பவரை திருமணம் செய்துகொண்டார்.
எம்ஜிஆர் ஆட்சியில் கடலூர் மாவட்ட ஆட்சியராக இருந்த சந்திரலேகாவின் மூலம் ஜெயலலிதாவின் அறிமுகம் சசிகலாவுக்கு கிடைத்தது.
வீடியோ கேசட்டுகள் கொடுப்பதற்காக ஜெயலலிதாவின் போயஸ் கார்டன் சென்று வந்த சசிகலா பின்னர் அவருடனே நிரந்தரமாக வசிக்க தொடங்கினார்.
இவருடைய அக்கா வனிதா மணியின் மூன்றாவது மகன் சுதாகரனை 1995- ல் ஜெயலலிதா தனது வளர்ப்பு மகனாக அறிவித்தார்.
சர்ச்சைகள் காரணமாக பின்னர் அதனை ஜெயலலிதா ரத்து செய்தார்.
சொத்துக்குவிப்பு வழக்கில் ஜெயலலிதாவுடன் சிறைவாசம் சென்ற சசிகலா கடந்த டிசம்பர் மாதம் 5 ஆம் திகதி ஜெயலலிதா இறந்ததையடுத்து அதே மாதம் 21 ஆம் திகதி அதிமுக பொதுச்செயலாளராக நியமிக்கப்பட்டார்.
கட்சி பதவியேற்ற ஒன்றரை மாத இடைவெளியில் தமிழக முதல்வராகவும் சசிகலா தெரிவு செய்யப்பட்டுள்ளார்.