மற்ற முக கவசங்களுடன் ஒப்பிடும்போது துணி முக கவசங்கள் வைரஸ்களிடம் இருந்து குறைவான பாதுகாப்பை வழங்குகின்றன என்று கண்டறியப்பட்டுள்ளது.
மருத்துவமனைகளில் டாக்டர்கள், நர்சுகள் உள்ளிட்ட மருத்துவ பணியாளர்கள், அறுவை சிகிச்சைக்கு அனுமதிக்கப்படும் நோயாளிகள் மத்தியில் புழக்கத்தில் இருந்த முக கவசங்கள், கொரோனா வைரஸ் அச்சுறுத்தலுக்கு பிறகு அனைத்து தரப்பு மக்களும் பயன்படுத்தும் அத்தியாவசிய பொருளாக மாறிவிட்டது. கொரோனா வைரஸ் பரவ தொடங்கியபோது மருத்துவ உபயோகத்திற்குரிய ‘சர்ஜிக்கல் மாஸ்க்’ மட்டுமே பயன்பாட்டில் இருந்தது. அதன் விலையும் அதிகமாக இருந்தது. ஒருமுறை மட்டுமே அதனை பயன்படுத்த முடியும் என்ற நிலையும் இருந்தது. அதற்கு மாற்றாக துணி முக கவசங்கள் புழக்கத்திற்கு வந்தன.
ஒரு முறை பயன்படுத்திய பிறகு துவைத்து மீண்டும் பயன்படுத்த முடியும் என்பதால் பொது மக்கள் மத்தியில் துணி முக கவசத்திற்கு அமோக வரவேற்பும் கிடைத்தது. முக கவசம் அணிபவர்களில் பலர் துணி முக கவசத்தைத்தான் உபயோகிக்கிறார்கள். அவற்றை மீண்டும் மீண்டும் துவைத்து பயன்படுத்தும்போது வைரஸ் கிருமிகளை வடிகட்டும் திறன் பாதிப்புக்குள்ளாகுமா? என்ற கேள்வி எழாமல் இல்லை.
இது தொடர்பான ஆய்வை அமெரிக்காவிலுள்ள கொலராடோ போல்டர் பல்கலைக்கழகம் மேற்கொண்டது. ஆய்வில் துணி முக கவசங்களை கழுவி உலர்த்துவது வைரஸ் துகள்களை வடிகட்டும் திறனை குறைக்காது என்பது கண்டறியப்பட்டுள்ளது.
ஆராய்ச்சியாளர்களுள் ஒருவரான மெரினா வான்ஸ் கூறுகையில், ‘‘கொரோனா வைரஸ் தொற்று பரவிய தொடக்க காலத்தில் ‘சர்ஜிக்கல் மாஸ்க்’கள் குப்பையில் குவிந்து கிடந்ததை பார்த்து கவலைப்பட்டோம். அவை சுற்றுச்சூழலை கடுமையாக பாதிக்கும் என்பதை உணர்ந்தபோது கவலை அதிகரித்தது. பருத்தி துணியால் முக கவசங்கள் தயாரிக்கப்பட்டதும் குப்பையில் முக கவசங்கள் குவிவது குறைந்தது’’ என்கிறார்.
மீண்டும் மீண்டும் துவைத்து உலர்த்திய பிறகு பருத்தி இழைகள் காலப்போக்கில் உதிர்ந்து போக ஆரம்பித்தாலும், அவை துணியின் வடிகட்டுதல் திறனை பெரிய அளவில் பாதிப்பதில்லை என்பதையும் ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர்.
ஆய்வில் பருத்தி துணி முக கவசங்கள் வைரஸ் போன்ற மிக சிறிய துகள்களை (0.3 மைக்ரான்கள்) 23 சதவீதம் வரை வடிகட்டுகின்றன என்பது கண்டறியப்பட்டுள்ளது. ஆனால் கர்ச்சிப்கள் போன்ற சாதாரண துணி வகைகள் 9 சதவீதம் மட்டுமே வடிகட்டுகின்றன.
அறுவை சிகிச்சை முக கவசங்கள் சிறிய துகள்களை 42 முதல் 88 சதவீதம் வரை வடிகட்டுகின்றன. அறுவை சிகிச்சை முக கவசம் மீது பருத்தி துணி முக கவசங்களை அணியும்போது அவை கிட்டத்தட்ட 40 சதவீதம் வடிகட்டும் திறனை கொண்டிருக்கின்றன. கே.என்.95 மற்றும் என்95 போன்ற முக கவசங்கள் வியக்கத்தக்க வகையில் சிறப்பான பங்களிப்பை வழங்குகின்றன. அவை சிறிய துகள்களை 83 முதல் 99 சதவீதம் வரை வடிகட்டுகின்றன.
மற்ற முக கவசங்களுடன் ஒப்பிடும்போது துணி முக கவசங்கள் வைரஸ்களிடம் இருந்து குறைவான பாதுகாப்பை வழங்குகின்றன என்று கண்டறியப்பட்டாலும் மலிவு விலை, மறு பயன்பாடு போன்ற விஷயங்கள் துணி முக கவசங்களை அதிகம் உபயோகிப்பதற்கு காரணமாக அமைந்திருக்கின்றன என்றும் ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள்.