பால், பழங்கள், பூக்கள் கலந்து பயன்படுத்துவதால் இந்த ‘பேஸ் பேக்’, சருமத்தை மிருதுவாகவும், மென்மையாகவும், ‘பளிச்’ என்ற தோற்றத்தோடும் வைக்க உதவும்.
மலர் போன்ற மென்மையான முக அழகை விரும்பும் பெண்கள், மலர்களைக் கொண்டு ‘பேஸ் பேக்’ போடலாம். பூக்கள் பல்வேறு மருத்துவ தன்மைகளைக் கொண்டவை. எந்த விதமான பாதிப்பையும் ஏற்படுத்தாமல், இயற்கையான அழகைக் கொடுக்கக்கூடியவை.
பால், பழங்கள், பூக்கள் கலந்து பயன்படுத்துவதால் இந்த ‘பேஸ் பேக்’, சருமத்தை மிருதுவாகவும், மென்மையாகவும், ‘பளிச்’ என்ற தோற்றத்தோடும் வைக்க உதவும். மேலும் முகத்தில் இருக்கும் பருக்கள், கரும்புள்ளிகள் போன்றவற்றை அகற்றும் என்பதால் தயக்கமில்லாமல் இதை பயன்படுத்த முடியும்.
முகம் அழகாக ஜொலிப்பதற்கு எந்த வகை பூக்களை, எவ்வாறு பயன்படுத்தலாம் என்று பார்ப்போம்.
ஆவாரம் பூ பேஸ் பேக்:
தேவையானவை:
ஆவாரம் பூ – 15
அரிசி மாவு – 1 டீஸ்பூன்
மஞ்சள் தூள் – ¼ டீஸ்பூன்
ரோஜா பன்னீர் – தேவையான அளவு
வெயிலில் செல்வதால் கறுத்துப்போகும் சருமத்தை பழைய நிலைமைக்கு கொண்டுவருவதற்கு ஆவாரம் பூ உதவும். மேலே குறிப்பிடப்பட்டிருக்கும் பொருட்கள் அனைத்தையும் ஒன்றாகக் கலந்து பசை போல அரைக்கவும். இதை முகத்திலும், கழுத்திலும் தடவி, 15 நிமிடங்கள் கழித்து மென்மையாக மசாஜ் செய்தால் சரும நிற மாற்றத்தை உணர்வீர்கள். வாரம் ஒரு முறை இதைச் செய்யலாம்.
ரோஜா பூ பேஸ் பேக்:
தேவையானவை:
ரோஜா பூ – 1
பால் – 1 டீஸ்பூன்
கோதுமைத் தவிடு – 1 டீஸ்பூன்
முதலில் ரோஜா பூவின் இதழை நன்றாக அரைத்துக் கொள்ளவும். பின்பு அதனுடன் கோதுமைத் தவிடு, பால் கலந்து நன்றாக அரைக்கவும். இந்தக் கலவையை முகத்தில் பூசி மசாஜ் செய்யவும். பின் 15 நிமிடம் கழித்து வெதுவெதுப்பான நீரில் கழுவினால் முகம் பொலிவு அடையும்.
செம்பருத்தி பூ பேஸ் பேக்:
தேவையானவை:
செம்பருத்தி பூ – 1
தயிர் – 1 டீஸ்பூன்
முல்தானி மெட்டி – 2 டீஸ்பூன்
ரோஜா பூ – 1
முதலில் ரோஜா மற்றும் செம்பருத்தி இதழ்களை சேர்த்து அரைத்துக்கொள்ளவும். பின்பு அதில் தயிர் மற்றும் முல்தானி மெட்டி கலந்து முகத்தில் தடவவும். 20 நிமிடம் கழித்து குளிர்ந்த நீரால் கழுவினால் முகம் மிருதுவாகும். கரும்புள்ளிகள், அழுக்குகள் நீங்கி ‘பளிச்’ என்று மாறும்.
மல்லிகை பேஸ் பேக்:
தேவையானவை:
மல்லிகைப்பூ இதழ்கள் – கால் கப்
கெட்டித் தயிர் – கால் கப்
இரண்டையும் தண்ணீர் சேர்க்காமல் மிக்சியில் நன்றாக அரைத்துக்கொள்ளவும். அதை முகம் மற்றும் கழுத்துப் பகுதியில் பூசவும். 20 நிமிடங்கள் கழித்து நீரால் கழுவவும். வறண்ட சருமம் கொண்டவர்களுக்கு இந்த பேஸ் பேக் சிறந்தது.