அதிமுக கட்சியின் பொதுச்செயலாளராக சசிகலா நியமிக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து அதிமுகவில் இருந்து விலகி வந்த நடிகர் ஆனந்த்ராஜ், தற்போது தமிழக சட்டமன்ற கட்சி தலைவராக சசிகலாவை அதிமுக எம்.எல்.ஏ.க்கள் ஒருமனதாக தேர்வு செய்தது குறித்து தனது கருத்தை தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறும்போது, தமிழகத்தில் மறுபடியும் ஒரு ஜுரம் தொற்றுக் கொண்டுவிட்டது. அதிமுக ஏன் அவசரமாக இந்த முடிவை எடுத்தது? யாருக்காக இந்த அவசரம்? ஒரு தனி மனிதர் அரசியலில் முதலமைச்சர் ஆகலாம். ஆனால், யார் முதல்வராக வேண்டும் என்பது குறித்து மக்களிடம் கருத்து கேட்டிருக்க வேண்டும்.
இன்று அம்மாவின் ஆன்மா சென்னை கடற்கரையில் உறங்கிக் கொண்டிருக்கிறது. ஆனால், தொடர்ந்து சென்னை கடற்கரைக்கு சோதனை வந்துகொண்டுதான் இருக்கிறது. இதையெல்லாம் பார்க்கும்போது, அம்மா நமக்காக ஏதோ சொல்ல வருவதுபோல் தெரிகிறது. ஜனநாயக முறைப்படி மக்கள் தேர்ந்தெடுத்து ஒருவரை முதலமைச்சராக கொண்டு வந்தால் அவரை முதலமைச்சராக ஏற்றுக் கொள்ளலாம். நல்லாட்சி நடந்து கொண்டிருக்கும் இந்த சமயத்தில் ஏன் இந்த அவரச முடிவு எடுக்கவேண்டும் என்று தெரியவில்லை.
இவ்வாறு தனது கருத்தை தெரிவித்தார்.