படையினர் வசமுள்ள தமது காணிகளை விடுவிக்குமாறு வலியுறுத்தி கேப்பாப்பிலவு பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட பிலக்குடியிருப்பு மக்கள் கடந்த ஒரு வார காலமாக இரவு பகலாக சத்தியாக்கிரக போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில், கோப்பாப்பிலவில் படையினர் வசமுள்ள காணிகளை பார்வையிடுவதற்காக கொழும்பிலிலிருந்து இன்றைய தினம் (திங்கட்கிழமை) ராணுவ உயர்மட்ட அதிகாரிகள் செல்லவுள்ளதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
படையினர் வசமுள்ள காணிகளில் விடுவிக்கப்படக்கூடிய பகுதிகளை விடுவிப்பதற்கான நடவடிக்கை, அங்குள்ள விமானப்படை அதிகாரிகளுடன் கலந்துரையாடி மேற்கொள்ளப்படும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
சுமார் 6 வருட காலமாக மீள்குடியேற்றத்திற்காக காத்திருக்கும் இம் மக்களின் காணிகளில் விமானப்படைத் தளம் மற்றும் ராணுவ முகாமை அமைத்து, அங்கு உள்நுழைவதற்கும் படையினர் தடைகளை ஏற்படுத்தியுள்ளனர். இந்நிலையில் காணி விடுவிப்பு தொடர்பாக தமக்கு வழங்கப்பட்ட வாக்குறுதிகள் அனைத்தும் பொய்த்துப்போனதால் கடந்த மாதம் 31ஆம் திகதி முதல் இம் மக்கள் தொடர் சத்தியாக்கிரக போராட்டத்தை நடத்தி வருகின்றனர்.
கேப்பாப்பிலவு விமானப்படைத்தளத்தில் பிரதான நுழைவாயிலை மறித்து, கொட்டும் பனியையும் பொருட்படுத்தாமல் தமது சொந்த மண்ணை மீட்பதற்காய் இரவு பகலாய் போராடி வருகின்றனர்.
போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மக்களை அமைச்சர் ரிஷாட் பதியுதீன், வடக்கு முதல்வர் சி.வி.விக்னேஸ்வரன் உள்ளிட்ட அதிகாரிகள் சந்தித்து கலந்துரையாடியிருந்ததோடு, இதன்போது தமது சொந்த நிலத்தில் காலடி எடுத்து வைக்கும்வரை போராட்டம் தொடருமென மக்கள் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.