அமெரிக்காவில் இடம்பெற்றுள்ள ஆட்சி மாற்றமானது இலங்கையின் போர்க்குற்ற விவகாரத்தில் பாரிய தாக்கத்தை செலுத்துமென எதிர்பார்க்கப்பட்டுள்ள நிலையில், அமெரிக்காவில் இன்றைய தினம் முக்கிய சந்திப்பொன்று இடம்பெறவுள்ளது.
அமெரிக்காவிற்கு விஜயம் செய்துள்ள அமைச்சர் சுசில் பிரேமஜயந்த, அமெரிக்க ராஜாங்க திணைக்கள அதிகாரிகளுடன் இன்று (திங்கட்கிழமை) பேச்சுவார்த்தையில் ஈடுபடவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இலங்கையின் போர்க்குற்ற விவகாரத்தில் அமெரக்காவின் பங்கு காத்திரமாக காணப்படும் நிலையில், கடந்த 2015ஆம் ஆண்டு இலங்கையின் அனுசரணையுடன் ஐ.நா. மனித உரிமை பேரவையில் கொண்டுவரப்பட்ட தீர்மானம் முக்கியத்துவம் வாய்ந்ததாக காணப்படுவதோடு, அதனை அமுல்படுத்துவதற்கான அழுத்தம் பல்வேறு தரப்புகளினாலும் இலங்கைக்கு கொடுக்கப்பட்டு வந்தது.
எனினும், அதில் பரிந்துரைக்கப்பட்டிருந்த சர்வதேச விசாரணையாளர்களை உள்ளடக்கிய கலப்பு விசேட நீதிமன்றத்திற்கு இலங்கை அரசாங்கம் தொடர்ந்தும் எதிர்ப்பு தெரிவித்து வந்த நிலையிலேயே அமெரிக்க ஆட்சி மாற்றமும் இடம்பெற்றது.
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் வெளியுறவுக் கொள்கைகளானது இதற்கு முன்னைய அரசாங்கங்களை விட வித்தியாசமாக காணப்படுமென தெரிவிக்கப்பட்டாலும், இலங்கை விவகாரத்தில் அமெரிக்காவின் கரிசனை தொடருமென அண்மையில் இலங்கைக்கு விஜயம் செய்திருந்த ட்ரம்பின் பிரதிநிதி தெரிவித்திருந்தார்.
எவ்வாறாயினும் யுத்த குற்ற விசாரணையிலிருந்து விடுபடுவதற்கான சகல முயற்சிகளையும் முன்னெடுக்கும் இலங்கை அரசாங்கம், அதன் ஒரு கட்டமாகவே சுசிலை அங்கு பேச்சுவார்த்தைக்கென அனுப்பிவைத்துள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.