தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனுக்கு உயிர் அச்சுறுத்தல் இருப்பதாகவும் குறித்த சதித்திட்டத்தின் பின்னணியில் செயற்பட்ட ஐவரே அண்மையில் யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி ஆகிய பகுதிகளில் கைதுசெய்யப்பட்டதாகவும் அரச தரப்பு கூறியுள்ள நிலையில், குறித்த சந்தேகநபர்களை நீதிமன்றில் ஆஜர்படுத்தியபோது அவர்கள் போதைப்பொருள் வைத்திருந்ததாகவே கூறப்பட்டதென்றும் சுமந்திரனுக்கான அச்சுறுத்தல் தொடர்பில் எதனையும் குறிப்பிடவில்லையென்றும் வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
யாழில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) மாலை இடம்பெற்ற நிகழ்வொன்றையடுத்து ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் மேற்குறித்தவாறு தெரிவித்துள்ளார்.
இச் சம்பவத்தில் உண்மை இருந்தால் நீதிமன்றில் அதனை குறிப்பிட்டிருக்க வேண்டுமென தெரிவித்த வடக்கு முதல்வர், எதற்காக இவ்வாறான பேச்சுக்கள் இடம்பெறறுகின்றன என்பதை பற்றி ஆராய்ந்து பார்க்கவேண்டியுள்ளதென மேலும் தெரிவித்தார்.
எவ்வாறாயினும், கிளிநொச்சில் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டு ஒரு வருட காலத்திற்கு பின்னர் விடுவிக்கப்பட்ட பாலேந்திரன் ஜெயக்குமாரி தொடக்கம் ஒவ்வொரு காலப்பகுதியிலும் இவ்வாறு உயிர் அச்சுறுத்தலும் பதற்ற நிலையும் ஏற்பட்டு வருகின்றதென வடக்கு முதல்வர் சுட்டிக்காட்டியதோடு, தொடர்ந்து வடக்கு மாகாணத்தில் ராணுவத்தினர் முகாமிட்டிருக்க வேண்டும் என்பதற்காக இவ்வாறான கதைகள் பரப்பப்பட்டு வருகின்றனவா என்பது பற்றி தனக்கு தெரியாதென்றும் குறிப்பிட்டார்.