பொறுத்தது போதும் நல்ல எதிர்காலத்துக்காக நாம் போராடுவோம் என தீபா தனது தொண்டர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.
புதிய கட்சி அமைப்பது தொடர்பில் அவர் தொண்டர்களை சந்தித்து கலந்துரையாடி வருகின்றார். இந்த நிலையில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) ஜெ.தீபாவை சந்திப்பதற்காக சென்னை தியாகராயநகரில் உள்ள அவரது வீட்டிற்கு வருகை தந்த ஆதரவாளர்கள் முன்னிலையில் உரையாற்றும் போதே அவர் மேற்குறித்த அழைப்பை விடுத்துள்ளார்.
இதன் போது அவர் மேலும் தெரிவிக்கையில்,
“என்னை நம்பி வந்தவர்களுக்கு ஏதாவது செய்யவேண்டும் என்ற உறுதி எனக்கு இருக்கிறது. தமிழக மக்கள் தமது சுதந்திரத்தை இழந்தது போல ஒரு சூழல் தற்போது உருவாகி உள்ளது.
இதனை நான் வன்மையாக கண்டிக்கிறேன். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிதான் ஆளவேண்டும். இதில் மக்களுக்கு எந்த வித மாற்று கருத்தும் இருக்க முடியாது. பொறுத்தது போதும் நல்ல எதிர்காலத்துக்காக நாம் போராடுவோம்.
நாட்டுக் காகவும், மக்களுக்காகவும் வாழ்ந்தவர்கள் ஆட்சி செய்யலாம். ‘புரட்சி தலைவி’ (ஜெயலலிதா) என்ற பெயர் அழிந்துவிடாமல் காக்கவேண்டியது நமது கடமை. உங்களுக்காக நான் தொடர்ந்து பணி செய்வேன். நீங்கள் விரும்பும் குரலை உயர்த்தி உறுதியாக இருங்கள்.
நிச்சயமாக நமக்கு நல்ல எதிர்காலம் இருக்கிறது. ஜெயலலிதாவின் நிழலைக்கூட யாரும் தொட முடியாது. அதற்கு நானும் விடமாட்டேன். ஜனநாயகம், மக்களாட்சி மலரவேண்டும் என்பதற்காக நான் துணை நிற்பேன்” என இதன் போது தெரிவித்திருந்தார்.