அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் ரஷ்யா தொடர்பான கருத்துக்கள் அமெரிக்காவில் அதிர்வுகளை ஏற்படுத்தியுள்ளது.
ஃபுளோரிடாவில் உள்ள தனது வீட்டில் வைத்து சர்வதேச ஊடகம் ஒன்றிற்கு ஜனாதிகதி ட்ரம்ப் நேர்காணல் ஒன்றினை வழங்கியிருந்தார். அதன்போது, ரஷ்யா மீதான கொலை குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் ட்ரம்பின் நிலைப்பாடு தொடர்பில் கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு பதில் அளித்த டொனால்ட் ட்ரம்ப், “கொலையாளிகள் பலர் உள்ளனர். அமெரிக்காவிலும் கொலையாளிகள் பலர் உள்ளனர். அமெரிக்காவில் உள்ளவர்கள் அப்பாவிகள் என்றா நீங்கள் கருதுகிறீர்கள்?” என தெரிவித்துள்ளார்.
அத்துடன், ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் பூட்டின் தொடர்பிலும், ரஷ்யா மற்றும் அமெரிக்கா இடையிலான உறவு தொடர்பிலும் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு பதில் அளித்த டொனால்ட் ட்ரம்ப், “ஆம் நான் புடினுக்கு மதிப்பளிக்கின்றேன். நான் பலர் மீது அதீத மரியாதை கொண்டுள்ளேன். ரஷ்யாவை எதிர்ப்பதை விட நல்லுறவை பேணுவதே சிறந்தது. ஐ.எஸ் தீவிரவாதிகளுக்கு எதிரான போர் தொடர்பில் எமக்கு ரஷ்யாவிடம் இருந்து உதவிகள் கிடைத்தால் அது மிகவும் சிறப்பாக இருக்கும்” என தெரிவித்துள்ளார்.
அமெரிக்க ஜனாதிபதியின் ரஷ்யா தொடர்பான இவ்வாறான கருத்துக்கள் அமெரிக்க வெளியுறவு கொள்கை வகுப்பாளர்களையே அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.